பெங்களூரு: காங்கிரஸ் ஆட்சியைவிட பாஜக ஆட்சியில் கர்நாடகாவுக்கு அதிக நிதி வழங்கப்பட்டது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் இருப்பதாக கூறி 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிதி ஆயோக்கூட்டத்தை காங்கிரஸ் முதல்வர்கள் புறக்கணித்தனர்.அண்மையில்தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கர்நாடகா புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக அந்த மாநில காங்கிரஸ் அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறும்போது, “ஆந்திரா, பிஹார் மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களை பிரதமர் நரேந்திர மோடியால்பார்க்க முடியாது. அவரது கண்கள் பிரதமர் பதவி மீது மட்டுமேஉள்ளது. பட்ஜெட்டில் கர்நாடகமக்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்’’ என்று குற்றம் சாட்டினார்.
இதன்காரணமாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் சித்தராமையா புறக்கணித்தார்.
இந்த சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய பட்ஜெட் குறித்து தவறான தகவல்களை கர்நாடக அரசு பரப்பி வருகிறது. இந்ததகவல்கள், முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி நடத்தியது. அப்போதைய மத்திய அரசு, 10 ஆண்டுகளில் கர்நாடகாவுக்கு ரூ.81,791 கோடி நிதியை வழங்கியது.
கடந்த 2014 முதல் 2024-ம் ஆண்டு வரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி நடத்தியது. இந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு சார்பில் கர்நாடகாவுக்கு ரூ.2,95,818 கோடி நிதி வழங்கப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கர்நாடகாவுக்கு மானியமாக ரூ.60,779 கோடி வழங்கப்பட்டது. பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் கர்நாடகாவுக்கு மானியமாகரூ.2,39,955 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியைவிட பாஜக ஆட்சியில் கர்நாடகாவுக்கு அதிக நிதி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.