பிரபஞ்சத்தில் உள்ள கோள்களும் கிரகங்களும் மட்டுமல்ல, விண்வெளியில் உள்ள சிறுசிறு விஷயங்களும் சுவராசியமானவை, ஏதேனும் ஒருவிதத்தில் பூமியையும், அதில் வாழும் உயிரினங்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே விஞ்ஞானிகள், வானியல் நிகழ்வுகளையும், வானையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டும், பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2016 இல் ஜப்பானின் வீனஸ் ஆர்பிட்டர் அகாட்சுகி சுக்கிரனை சுற்றி மிகப்பெரிய வளையம் இருப்பதை கண்டறிந்தது. ஆனால் நாசாவின் கூற்றுப்படி, வீனஸ் கிளவுட் டிஸ்கான்டினியூட்டி (Venus Cloud Discontinuity) சுமார் 1980 களில் இருந்திருக்கலாம்.
இது பலருக்கு தெரிந்த நிலையில், கடந்த சில வாரங்களாக சுக்கிரன் கிரகத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் ஆச்சரியங்களைத் தருவதாக இருக்கிறது. அதில் முக்கியமானது, சுக்கிரனின் வளிமண்டலத்தில் இரண்டு முக்கியமான வாயுக்கள் இருப்பதை வானியலாளர்கள் கண்டறிந்தனர். அவற்றின் மூலக்கூறு பாஸ்பைன் மற்றும் அம்மோனியா ஆகும்.
தற்போது, வெள்ளி கிரகத்தில் அமிலம் நிறைந்த மேகங்களின் விசித்திரமான தடிமனான சுவர் இருப்பதை அமெச்சூர் வானியலாளர் ஒருவர் கண்டறிந்துள்ளார். வீனஸ் கிளவுட் டிஸ்கன்டினியூட்டி என்று அழைக்கப்படும் இந்த சுவர் சுமார் 5,000 மைல் நீளம் கொண்டது என்பது அதிசயமானதாக இருக்கிறது. இது கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 30 மற்றும் 35 மைல்களுக்கு மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியின் அஜெரோலாவிலிருந்து, சுக்கிரனின் இந்த சுவரை லூய்கி மோரோன் புகைப்படம் எடுத்துள்ளார். ஜூலை 17 அன்று இந்த படத்தை எடுத்தார். இறுதியாக 2022 இல் இந்த சுவரை பார்த்ததாகவும் தெரிவித்தார். இந்த சுவரானது, வெள்ளி கிரகத்தைச் சுற்றி மேற்கு நோக்கி நகரும் அலை போன்ற அமைப்பு என்றும் அவர் கூறுகிறார். ஒரு மணி நேரத்திற்கு சுமார் 205 மைல் வேகத்தில் கிரகத்தைச் சுற்றி வரும் இந்த மாபெரும் ‘வெள்ளிச்சுவர்’ ஐந்து பூமி நாட்களில் சுக்கிரன் கிரகத்தைச் சுற்றி வருகிறது.
“1980 களின் தசாப்தத்தில் நிகழ்த்தப்பட்ட கே-பேண்டில், இரவு நேரத்தில் இந்த சுவர் தொடர்பான அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அகாட்சுகி/ஐஆர்2 படங்களைப் பயன்படுத்தி உறுதியாக கண்டறிந்தோம்,” என்று இந்த கட்டமைப்பை முதலில் கண்டறிந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்ஸா) விஞ்ஞானி ஜேவியர் பெரால்டா தெரிவித்துள்ளார்.
2006-2008 ஆண்டுகளில் சுக்கிரனில் சுவர் இருந்ததாக தரவுகள் காட்டுகின்றன என்று விஞ்ஞானி ஜேவியர் பெரால்டா மேலும் கூறினார். இதுபோன்ற “வளிமண்டல இடையூறு” ஏற்படும் ஒரே கிரகம் சுக்கிரன் கிரகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. “ஒரு புதிய வானிலை நிகழ்வு” சுக்கிரனைத் தவிர பிற கிரகங்கள் எதிலும் காணப்படுவதில்லை. ஆனால், இந்த சுவர் ஏன் உருவாகியுள்ளது, அது என்ன என விஞ்ஞானிகளால் உறுதியாக கணிக்கமுடியவில்லை.
சுக்கிரன் கிரகம்
அடர்த்தியான வளிமண்டலங்களில் ஒன்றான சுக்கிரன் கிரகத்தில், சல்பூரிக் அமிலம் கொண்ட ஒரு தடிமனான மேக போர்வை உள்ளது. வளிமண்டலத்தில் இருக்கும் CO2 அளவுகளால், அதன் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியாக சுமார் 870 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் உள்ளது. “சூப்பர்-ரோட்டேஷன்” எனப்படும் ஒரு நிகழ்வை வெளிப்படுத்துகிறது சுக்கிரனின் வளிமண்டலம் அந்த கிரகத்தை விட மிக வேகமாக சுழல்கிறது. கிரகத்தின் மேற்பரப்புக்கும் அதன் வேகமாக நகரும் மேகங்களுக்கும் இடையிலான இணைப்பு தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இது வளிமண்டலத்தில் மிகவும் புதிய நிகழ்வாக இருப்பதால், இது தொடர்பான விளக்கத்தை புரிந்துக் கொள்வது கடினமாக இருந்தாலும், மேகங்களின் பண்புகள் மற்றும் வளிமண்டல ஏரோசோல்களின் விநியோகம் ஆகியவற்றின் மீதான மேக போர்வையின் சுழற்சியின் விளைவுகள், சிக்கலான விஞ்ஞானப் புதிரை விடுவிக்க உதவியாக இருக்கும்.
இந்த மேகப் போர்வை என்பது நிரந்தரமான வளிமண்டல நிகழ்வு அல்ல என்றும் ‘மீண்டும் நிகழும்’ ஒன்று என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதாவது, இது எல் நினோ அல்லது பூமியில் லா நினா போன்றவை என்றும், இந்த மேக போர்வை எப்படி உருவாகிறது என்பதோ இதன் விளைவு என்ன என்பதும் தெரியவில்லை. இயற்கையை நாம் அவதானிக்க முடியுமே தவிர, அதை முற்றிலுமாக கணித்துவிடவோ புரிந்துக் கொண்டுவிடவோ முடியாது.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் – Zee News இதற்கு பொறுப்பேற்காது.)