புதுடெல்லி: திடீர் வெள்ளத்தில் சிக்கி டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ள இந்த விசாரணை குழு, 30 நாட்களுக்குள் விபத்துக்கான காரணங்களை கண்டறிந்து, நடவடிக்கைகள் மற்றும் கொள்கை மாற்றங்களை பரிந்துரை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர், டெல்லி அரசின் முதன்மை செயலர், டெல்லி சிறப்பு காவல் ஆணையர், தீயணைப்புத் துறை ஆலோசகர், மத்திய உள்துறை இணை செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இன்னொரு புறம், இந்த விபத்தில் உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு அனுமதி அளித்த மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், நாட்டில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், பயிற்சி நிலையங்கள் என்பது வணிகமாக மாறியிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “செய்தித்தாள் விளம்பரங்களுக்காக பயிற்சி மையங்களால் செய்யப்படும் பெரும் செலவு மாணவர்களிடமிருந்தே வசூலிக்கப்படுகிறது. பயிற்சி நிறுவனங்கள் அதிக வருமானத்துடன் கூடிய ஒரு செழிப்பான தொழிலாக மாறியுள்ளன. ஒவ்வொரு புதிய கட்டடமும் மாணவர்களிடம் பெறப்பட்ட கட்டணத்தில் இருந்து எழுப்பப்படுகிறது. நாட்டில் உள்ள பல்வேறு வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் வாய்ப்புகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” இவ்வாறு ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.
அண்மையில் பெய்த கனமழை காரணமாக டெல்லியில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்துக்குள் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்குதான் பயிற்சி மையத்தின் நூலகம் செயல்பட்டு வந்துள்ளது. இதனால், அங்கு குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ஏராளமான மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதில், 2 மாணவிகள், ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ராவ் பயிற்சி மையத்தின் தரைதளத்தை சேமிப்பகம் அல்லது வாகன நிறுத்தப் பகுதியாக மட்டுமே பயன்படுத்த டெல்லி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கிய நிலையில் விதிகளை மீறி அங்கு நூலகம் நடத்தப்பட்டுள்ளது. இதுவே உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அவர்களது மரணத்துக்கு நீதி கேட்டுடெல்லி முழுவதும் மாணவர்களின் போராட்டம் நேற்று தீவிரம் அடைந்தது. டெல்லி மேயரின் வீட்டை முற்றுகையிட்டு பல்வேறு மாணவ அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.