கேரள மாநிலம், கொல்லம் முளங்காடகம் பகுதியைச் சேர்ந்தவர் தன்யா மோகன் (40). மணப்புரம் குழுமத்தின் அங்கமான திருச்சூர் திருப்ரையார் மணப்புரம் கோம்ப்டக் அண்ட் கன்சல்ட்டன்ட் லிமிட்டெட் நிறுவனத்தின் உதவி பொது மேலாளராக இருந்தார். அந்த நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக உதவி பொது மேலாளராக இருந்ததால், மிகவும் நம்பிக்கைகுரியவராக வலம் வந்தார். இந்த நிலையில்தான் தன்யா மோகன் லோன் ஆப் மூலம் சிறிது சிறிதாக 19.94 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தில் பலருக்கும் தாராளமாக கடன் கொடுத்துள்ளார். கடன் கொடுக்கும்போது மெதுவாக பணத்தைத் திருப்பி தந்தால்போதும் எனக் கூறி கொடுத்துள்ளார் தன்யா மோகன். அந்த நிறுவனம் தனிநபர் கடன் வழங்குவதற்காக டிஜிட்டல் ஆப் ஒன்றை ஏற்படுத்தியது. அந்த ஆப் உருவாக்குவதில் தன்யா மோகன் முக்கிய பங்கு வகித்துள்ளார். அந்த ஆப் மூலமாகத்தான் தன்யா மோகன் பணம் மோசடி செய்துள்ளார். அந்த ஆப்பில் ஏற்பட்ட சாப்ஃட்வேர் பிரச்னையை சரி செய்யும்போதுதான் தன்யா மோகனின் மோசடி அம்பலமானது.
ஆப்பில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்ய தொழில்நுட்ப குழுவினர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர். அதன் பின்னர் அக்கவுன்ட்களை சரிபார்பதற்காக தன்யா மோகன் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே கம்ப்யூட்டர் வேகம் குறைந்ததாகக் கூறி தன்யா மோகன் அலுவலகத்தில் இருந்து திடீரென வெளியேறினார். இது நிர்வாகிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து அனைத்து கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன. அப்போது பலமுறையாக ரூ.19.94 கோடி மோசடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து தன்யா மோகனை போலீஸார் தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து கொல்லம் கிழக்கு காவல் நிலையத்தில் தன்யா மோகன் சரணடைந்தார். அவர் வலப்பாடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். தன்யா மோகன் கொடுங்கலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஆணை பிறப்பித்த நிலையில், தன்யா மோகன் சிறையில் அடைக்கப்பட்டார்.
பி.டெக் படித்து முடித்த பின்னர் சுயமாக ஒரு ஆப் தயாரித்துள்ளார் தன்யா மோகன். தொழில்நுட்பத்தில் நுண்ணறிவுகொண்ட தன்யா மோகன், லோன் ஆப் மூலம் வரும் வட்டித் தொகைகளை மோசடியாக தனது 5 வங்கிக் கணக்குகளுக்கும், தனது தந்தை மற்றும் சகோதரரின் வங்கிக் கணக்குக்கும் அனுப்பியுள்ளார். 2019-ம் ஆண்டு முதல் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும், லோன் ஆப் மூலம் மோசடி செய்ததை தன்யா மோகன் ஒப்புக்கொண்டதாகவும், மோசடி மூலம் கிடைத்த பணத்தை ஆன்லைன் டிரேடிங்-க்கு பயன்படுத்தியதாக தன்யா மோகன் கூறியதாகவும் கொடுங்கல்லூர் டி.எஸ்.பி ராஜூ தெரிவித்துள்ளார். தன்யா மோகனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.