மதுரை: “தமிழகத்தில் 20 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 5,557 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் 3,035 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட கல்வித் துறையில் ஆர்எம்எஸ்ஏ திட்டத்தில் கடந்த 2016- 2017 ஆண்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக 2027-ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி குணசேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2017-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழகத்தில் லஞ்ச வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களில் 12 துணை சட்ட ஆலோசகர்கள், 2 கூடுதல் சட்ட ஆலோசகர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்களை நிரப்ப குற்றவியல் துறை இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார் எனக் கூறப்பட்டிருந்தது.
தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதிடுகையில், “தமிழகத்தில் 2004 முதல் 2024 வரையிலான 20 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 5557 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் 3035 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1059 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும், 574 வழக்குகளில் தீர்ப்பாய ஒழுங்கு நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்றார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: “குற்றவியல் நீதி பரிபாலன முறை சிறப்பாக இயங்க கூடுதல் நீதிமன்றங்களை உருவாக்குவதுடன் போதுமான அரசு வழக்கறிஞர்களையும் நியமிக்க வேண்டும். போதுமான அளவு அரசு வழக்கறிஞர்கள் இல்லாவிட்டால் குற்றவியல் நீதிமன்றங்கள் முடங்கும் நிலை ஏற்படும். இதனால் உள்துறை முதன்மை செயலாளர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார்.
அவர் தமிழகம் முழுவதும் குற்றவியல் நீதிமன்றங்களில் எத்தனை அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது? இந்த காலியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு வழக்கறிஞருக்கு 1.8.20204-க்குள் தகவல் அளிக்க வேண்டும். அதை அரசு வழக்கறிஞர் 2.8.2024-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.