கோவை: சிறுவாணி அணையில் இருந்து தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கசிந்து வீணாகிறது. இதை சரி செய்ய ரூ.3 கோடி செலவிட கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவையின் முக்கிய நீராதாரமாக உள்ளது சிறுவாணி அணை. இது கேரள மாநிலம் பாலக்காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்தேக்க உயரம் 49.53 அடி என்றாலும், கேரள அரசின் நெருக்கடிகளால் அணையின் பாதுகாப்பைக் காரணம் காட்டி 45 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது.
தற்போது சிறுவாணி அணையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அணையின் நீர்மட்டம் 42 அடி அளவுக்கு பராமரிக்கப்படுகிறது. சிறுவாணி அணையில் முழு நீர்தேக்க உயரத்துக்கும் தண்ணீரை தேக்க வேண்டுமானால் அணையில் உள்ள நீர்க்கசிவுகளை சரி செய்ய வேண்டியது அவசியம்.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் கூற்றுப்படி, சிறுவாணி அணையிலிருந்து தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கசிந்து வீணாக வெளியேறுகிறது. இந்தக் கசிவை சரி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக புனேவில் உள்ள மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையத்தின் நிபுணர் குழுவை வரவழைத்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், கசிவை சரி செய்ய கேரள அதிகாரிகளால் விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு காத்திருப்பில் உள்ளது. இச்சூழலில், நீர்க்கசிவை சரி செய்ய தேவையான நிதியை செலுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “சிறுவாணி அணையின் நீர்க்கசிவுகளை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் சார்பில், கேரள அரசு நீர்வளத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, கசிவினை சரி செய்ய தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் மூலம் வழிமுறைகளை தேர்வு செய்ய ரூ.17 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்தனர். மேலும், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு அணையின் நீர்க்கசிவுகளை சரி செய்ய ரூ.3 கோடி வரை செலவாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதை குடிநீர் வடிகால் வாரியமும் கடிதம் மூலம் மாநகராட்சியிடம் உறுதிப்படுத்தியுள்ளது.
வறட்சி காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, கசிவுகளை சரி செய்ய விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். எனவே, ரூ.17 லட்சம் ஒதுக்கி தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் உரிய வழிமுறைகள் பெறவும், நீர்க்கசிவுகளை சரி செய்ய ரூ.3 கோடியை நகராட்சி நிர்வாக இயக்குநர் மூலம் அரசிடம் பெற்று அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சி மன்றத்திலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது,” என்றனர்.