கராச்சி:
பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம், உப்பர் குர்ரம் மாவட்டத்தில் இரண்டு பழங்குடியின பிரிவினரிடையே நில உரிமை தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சினை இருந்துள்ளது. இது முற்றிய நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். புசேரா கிராமத்தில் ஏற்பட்ட இந்த கலவரம், மற்ற கிராமங்களுக்கும் பரவியது. ஆங்காங்கே பதுங்கு குழிகள் அமைத்து எதிரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதிகள் போர்க்களமாக காட்சியளித்தன.
இந்த வன்முறை தாக்குதல்களில் இரு தரப்பிலும் கடுமையான உயிரிழப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கிடையே அரசு சார்பில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 5 நாள் தொடர் மோதலுக்கு பிறகு நேற்று சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவில் இரு தரப்பினரும் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து துப்பாக்கி சூடு நடக்கிறது. இதனால் பழங்குடியின கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது.
இந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 42 ஆக உயர்ந்துள்ளது. 170 பேர் காயமடைந்துள்ளனர்.
கலவரத்தை தடுத்து நிறுத்தி அமைதியை ஏற்படுத்துவதற்கு அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளனர். பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என இரு தரப்பினரையும் வலியுறுத்தி உள்ளனர்.
செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள… https://x.com/dinathanthi