பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வந்த ரயிலில் 2,700 கிலோ நாய் இறைச்சிகொண்டு வரப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.இந்த நிலையில், புதிய திருப்பமாக அது ஆட்டிறைச்சிதான் என்பதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜெய்ப்பூரிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவுக்கு வந்த ரயிலில் 90 பார்சல்களில் 2,700 கிலோ இறைச்சியை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது நாய் இறைச்சி என முதலில் கூறப்பட்டதையடுத்து ஏராளமான ஆர்வலர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் எப்ஐஆர் பதிவுசெய்ததையடுத்து, அந்த இறைச்சியைஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்கு எடுத்து சென்றனர்.
உணவு பாதுகாப்பு ஆணையர் கே.ஸ்ரீனிவாஸ் கூறியதாவது: பார்சலில் வந்தது ஆட்டிறைச்சிதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான், குஜராத்தின் கட்ச்-புஜ் பகுதிகளில் அதிகம் காணப்படும் சிரோஹி வகை ஆடுகளின் இறைச்சி அது. அது பார்ப்பதற்கு நாய் இறைச்சி போல் இருப்பதால் இந்த குழப்பம் அடிக்கடி ஏற்படுகிறது. கர்நாடகாவில் ஆட்டிறைச்சிக்கு தட்டுப்பாடு உள்ளதால் வெளிமாநிலங்களிலிருந்து இந்த வகை இறைச்சியை இங்குள்ள வியாபாரிகள் மலிவுவிலைக்கு வாங்கி விற்பனை செய்கின்றனர். பெங்களூருவில் நாய் இறைச்சி விற்கப்படுவதில்லை.
இவ்வாறு ஸ்ரீனிவாஸ் கூறினார்.