போலி பேராசிரியர் நியமனம்: அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்; விளக்கம் தர ஒருவாரம் அவகாசம்

சென்னை: இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பித்த கல்லூரிகள் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 470-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே ஆதார் எண்ணை தவறாக பயன்படுத்தி பேராசிரியர்கள் பலர் முறைகேடாக பல கல்லூரிகளில் பணியாற்றிய தகவல்கள் வெளியாகி சர்ச்சையானது.

இந்த முறைகேட்டில் 800 பேர் வரை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களை அழைத்து விசாரிக்கவும் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.



இந்நிலையில் முறைகேட்டுடன் தொடர்புடைய அனைத்து கல்லூரிகளிடமும் விளக்கம் கேட்டு தற்போது அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தனியார் அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் பேராசிரியர்கள் போலியாக பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த தனியார் அமைப்புக்கு நன்றி. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மற்றும் தொடர்புடைய கல்லூரிகளிடமும் விளக்கம் கேட்டுள்ளோம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுரப்பா தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில், “நான் பணியில் இருந்த காலத்திலேயே இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றன. அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அளவும் குறைக்கப்பட்டது. இதுசார்ந்த வழக்கில் உயர் நீதிமன்றமும் பல்கலைக்கழக உத்தரவை உறுதிசெய்தது’ என்று கூறியுள்ளார்.

அடுத்தகட்டமாக பேராசிரியர்கள், கல்லூரிகள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை விசாரணை குழு ஒரு வாரத்தில் பரிந்துரைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.