மகாராஷ்டிர வனப்பகுதியில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்த பெண் மீட்பு – நடந்தது என்ன?

மும்பை: மகாராஷ்டிர மாநில வனப்பகுதியில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண் மீட்கப்பட்டுள்ளார். அவரிடம் அமெரிக்க பாஸ்போர்ட் மற்றும் தமிழக முகவரி கொண்ட ஆதார் அட்டை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மரத்தில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரிடம் அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகலும் மற்றும் தமிழக முகவரி கொண்ட ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் உள்ளன. அந்தப் பெண்ணின் பெயர் லலிதா கயி எனச் சொல்லப்படுகிறது.

சிந்துதுர்க் மாவட்டத்தின் சோனூர்லி கிராம வனப்பகுதியில் இப்பெண் மரத்தில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளார். சனிக்கிழமை (ஜூலை 27) வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற நபர், அந்தப் பெண்ணின் அழுகையை கேட்டு, போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீஸார் வந்து இரும்புச் சங்கிலியில் இருந்து அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.



அப்பெண்ணின் உடல்நிலையுடன், மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து அவரை கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக முகவரியுடன் கூடிய ஆதார் அட்டை, அமெரிக்க பாஸ்போர்ட் நகல் மற்றும் விசா கிடைத்துள்ள நிலையில், இதில் அமெரிக்க விசா காலாவதியாகிவிட்டது. கிடைத்துள்ள ஆவணங்களை கொண்டு அந்தப் பெண்ணின் விவரங்களை அறியும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய போலீஸார், “அந்தப் பெண் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை. சில நாட்களாக எதுவும் சாப்பிடாததாலும், வனப் பகுதியில் கனமழை பெய்ததாலும் அந்தப் பெண் பலவீனமாக இருக்கிறார். எவ்வளவு நேரம் அவர் கட்டிவைக்கப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. தமிழகத்தைச் சேர்ந்த அவரது கணவர் மனநலம் பாதிக்கப்பட்ட இப்பெண்ணை இங்கே கட்டி வைத்துவிட்டு ஓடியிருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.

முதற்கட்ட தகவலின் படி, கடந்த 10 வருடங்களாக அந்த பெண் இந்தியாவில் இருப்பது தெரியவந்துள்ளது. பெண்ணின் உறவினர்களை கண்டுபிடிக்க எங்கள் குழுவினர் தமிழகம், கோவா போன்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.