புதுடெல்லி: மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பட்ஜெட் 2024 மீது உரையாற்ற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் கடந்த 23 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய முக்கிய காரணமான தெலுங்கு தேசம் ஆளும் ஆந்திரா, ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பிஹார் மாநிலங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்கள் வெகுவாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி தனது சமூகவலைதளப் பக்கத்தில், “மத்திய அரசின் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டாகவே இது அமைந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் உள்ளது. பிஹாருக்கு ரூ.26 ஆயிரம் கோடி, ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.
சாமானிய இந்தியர்களுக்கு எந்தவித பலனும் இல்லாத வகையில், ஏஏ-வுக்கு (தொழிலதிபர்கள் அம்பானி, அதானி) பலன் தரும் விதமாக பட்ஜெட் உள்ளது.
மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணிக் கட்சிகளை மகிழ்விக்கும் விதமாகவும், திருப்திப்படுத்தும் விதமாகவும் பட்ஜெட்டைத் தயாரித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் மற்றும் முந்தைய மத்திய பட்ஜெட்டுகளில் இடம் பெற்றிருந்த அறிவிப்புகள் ஆகியவற்றையும் தற்போதைய மத்திய பட்ஜெட்டில் காப்பி அடித்து இடம் பெறச் செய்துள்ளனர்.” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் மக்களவையில் ராகுல் காந்தி பட்ஜெட் பற்றி உரையாற்றுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக காங்கிரஸ் எம்.பி.க்களை சந்தித்த ராகுல் காந்தி ” “மக்களவையில் தான் ஏற்கெனவே பேசிவிட்டதால் மற்ற எம்.பி.க்கள் சுழற்சி முறையில் பேச அனுமதி அளிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியதாகவும், ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தியே பேசினால் தான் அதன் தாக்கம் பெரிதாக இருக்கும் என்று எம்.பி.க்கள் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. எனவே, எம்.பி.க்கள் கோரிக்கைகளை ஏற்று இன்று மதியம் ராகுல் காந்தி மக்களவையில் பட்ஜெட் பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.