கடந்த சனிக்கிழமை மாலை வேளையில் தலைநகர் டெல்லியில் பொழிந்த கனமழை, லட்சியக் கனவுகளுடன் யுபிஎஸ்சி பயிற்சி பெற்று வந்த மாணவர்கள் மூவரது உயிரைப் பறித்தது. இது இயற்கைப் பேரிடர் மரணம் அல்ல. விதிமீறல்கள் எனும் செயற்கைப் பேரிடரின் மோசமான விளைவு. இந்த துயரச் சம்பவத்தின் துக்கம் தாளமுடியாமல் சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு நீதி கேட்டு வருகின்றனர்.
தனியார் பயிற்சி மையத்தின் விதிமீறல்தான் முதன்மைக் காரணம் என சொல்லப்பட்டுள்ளது. டெல்லி பிராந்தியத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் கட்சிகள் மற்ற கட்சிகளின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளன. இது தொடர்பாக தனியார் பயிற்சி மைய நிர்வாகிகள் இருவர் முதலில் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கைகள் தொடர்கிறது.
டெல்லியும் யுபிஎஸ்சி பயிற்சி மையங்களும்: டெல்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள பழைய ராஜேந்திர நகரில் அமைந்துள்ள பயிற்சி மையத்தின் தரைத்தளத்துக்கு கீழே உள்ள அடித்தளத்தில் (பேஸ்மென்ட்) உள்ள நூலகத்தில் மழை வெள்ளம் பெருக்கெடுத்த காரணத்தால் உயிரிழப்பு ஏறபட்டுள்ளது. இந்த கரோல் பாக் பகுதியில் ஏராளமான யுபிஎஸ்சி பயிற்சி மையங்கள் உள்ளன.
இங்கு தமிழகம், புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் குடிமைப் பணி ஆற்ற வேண்டுமென்ற பெருங்கனவோடு டெல்லி வந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். 10 மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை இங்குள்ள பயிற்சி மையங்கள் பயிற்சி அளித்து வருகின்றன. இங்கு சேர்க்கை பெறவே சில வழிமுறைகள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது முதல் கட்டணம் செலுத்துவது வரை அது நீள்கிறது.
இருந்தும் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு மாணவர்கள் படையெடுத்து வந்து பயிற்சி பெற காரணம், இங்கு இருக்கும் சிறந்த பயிற்சி வசதிகள், தங்களை போன்ற சக மாணவர்களுடன் இணைந்து அறிவை விரிவு செய்வது என ஏராளமாக உள்ள வாய்ப்புகள்தான். அந்தச் சூழல்தான். குறிப்பாக, அதன் கடந்த கால சக்சஸ் ரேட் தான். அதற்காகவே காத்திருந்து இந்தப் பயிற்சி மையங்கள்தான் தங்களுக்குச் சரியாக இருக்கும் என விண்ணப்பித்து பயிலும் மாணவர்களும் உள்ளனர். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. பெரும்பாலான மாணவர்களின் தேர்வு ஆஃப்லைன் பயிற்சியாக உள்ளது.
பிஜி முறையில் வாடகைக்கு தங்கியும், தனியாக வீடு எடுத்தும், டெல்லியில் உள்ள கல்லூரிகளில் படித்துக் கொண்டும் பயிற்சி பெறுகின்ற மாணவர்களாக இவர்கள் உள்ளனர். இவர்கள் எல்லோரது கனாவும் ஒன்றுதான். அது யுபிஎஸ்சி கிளியர் செய்வது. அதற்காக அல்லும் பகலும் தங்களது கடின உழைப்பை செலுத்துவார்கள். கிட்டத்தட்ட இங்கு நடைபெறும் காட்சிகள் எல்லாம் ‘12th Fail’ பாலிவுட் படத்தில் வரும் காட்சிகளை போல தான் இருக்கும். வெல்லும் வரை முயற்சிக்க வேண்டும் என்ற திடமான தன்னம்பிக்கை கொண்டவர்கள் இவர்கள். அவர்களில் உயிரிழந்த அந்த மூன்று மாணவர்களும் அடங்குவர்.
‘அவர்கள் உயிரிழப்புக்கு காரணம் அரசின் மெத்தன போக்குதான்’ என டெல்லியில் பயிற்சி பெறுகின்ற மாணவர் ஒருவர் சொல்கிறார். இந்தச் சம்பவத்துக்கு பிறகுதான் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு முன்னர் என்ன செய்தனர் என அவர் கேள்வி எழுப்புகிறார்.
யுபிஎஸ்சி மாணவர்கள் உயிரிழந்தது குறித்த செய்தி சனிக்கிழமை பின்னிரவு வெளிவந்ததும், அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் பயிற்சி மாணவர்களின் மொபைலுக்கு அழைப்பு மேற்கொண்டுள்ளனர். ‘பத்திரமா இருக்கியா மா’ என்பது மகள்களை பெற்ற அப்பாக்களின் கேள்வியாக இருந்தது. ‘தம்பி’ என பிள்ளைகளை அம்மாக்கள் நலம் விசாரித்தனர். அப்படித்தான் ஸ்ரேயா யாதவின் தாய் மாமாவான தர்மேந்திர யாதவ் போன் செய்துள்ளார். ஆனால், அவரால் ஸ்ரேயாவை தொடர்பு கொள்ளமுடியவில்லை.
“இங்கிருக்கும் சூழல் காரணமாகத்தான் நாங்கள் ஸ்ரேயாவை டெல்லி அனுப்பினோம். அலகாபாத், லக்னோ வேண்டாம் என முடிவு செய்தோம். இங்கு அவளுக்கு படிப்பதற்கான வசதி அதிகம் என்று கருதினோம். ஆங்கிலத்தில் புலமை பெறுவாள் என்று நினைத்தோம். இப்போது பாருங்கள் அவளது கனவும் கரைந்தது, அவளும் இல்லை. இதற்கு யார் பொறுப்பு?” என தர்மேந்திர யாதவ் கேட்கிறார்.
உயிரிழந்த மூவரில் ஸ்ரேயாவும் ஒருவர். அவரது அப்பா உத்தரப் பிரதேச மாநிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அவரது வருமானத்தை கொண்டு மகளின் பயிற்சி கட்டணத்தை செலுத்துவதே கடினம். குடும்பச் சூழலை உணர்ந்த உறவினர்கள் ஸ்ரேயாவின் கனவுக்கு உயிர் கொடுத்துள்ளனர். அது இப்படி ஆகும் என யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.
இதேபோல கேரளாவை சேர்ந்த நிவின் டால்வின் என்ற மாணவரும், தெலங்கானாவை சேர்ந்த டானியா சோனி என்ற மாணவியும் மழை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் உயிரிழப்பதற்கு சில நிமிடங்கள் வரை பயிற்சி மையத்தின் நூலகத்தில் இருந்துள்ளனர். மழைநீர் பேஸ்மென்டுக்குள் உள்ளே வர தொடங்கியதும் அங்கிருந்த மாணவர்கள் வெளியேறி உள்ளனர். இருப்பினும் சிலரால் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதில்தான் ஸ்ரேயா, நிவின், டானியா உயிரிழந்தனர். இதனை பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐந்தே நிமிடங்களில்…- “வழக்கமாக நூலகம் 7 மணி அளவில் பூட்டப்படும். சனிக்கிழமை நான் நூலகத்தில் தான் இருந்தேன். உணவு சாப்பிட வெளியில் வந்தேன். அப்போது அங்கு 30 பேர் வரை இருந்தார்கள். மீண்டும் நூலகத்துக்கு திரும்பிய போது பேஸ்மென்டில் நீர் நிரம்பி இருந்தது. ஐந்தே நிமிடத்தில் நீர் நிரம்பியுள்ளது. பலர் மேசையின் மீது ஏறி உயிர் தப்பியுள்ளனர். ஜன்னல் அருகே இருந்தவர்கள் தப்பி உள்ளனர். பின்பக்கம் இருந்தவர்கள் தான் நீரில் சிக்கினர்.
நீர் மிகவும் அழுக்காக இருந்தது. சிலரை கயிறு போட்டு மீட்டனர். இதை ஜீரணிக்க முடியவில்லை. மிகவும் வேதனையாக உள்ளது. அதிர்ச்சியும் பீதியும் அளிக்கிறது” என சம்பந்தப்பட்ட தனியார் பயிற்சி மையத்தில் படித்து வரும் மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார். பொருட்களை வைக்கும் குடோனாக பயன்படுத்துவதாக சொல்லி பேஸ்மென்ட் அனுமதி வாங்கப்பட்டுள்ளதாக தகவல். ஆன போதும் அதற்கு புறம்பாக அங்கு நூலகம் செயல்பட்டு வந்துள்ளது.
டெல்லி நகரத்தின் தற்போதைய வடிகால் சார்ந்த மாஸ்டர் பிளான் (திட்டம்) கடந்த 1976-ல் உருவாக்கப்பட்டது. அது இதற்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதைய மக்கள் தொகையை காட்டிலும் தற்போது நான்கு மடங்கு டெல்லியில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இருந்தும் புதிய வடிகால் வசதி சார்ந்த திட்டம் இன்னும் அரசால் செயல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடம் தாழ்வான பகுதி என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இப்போது டெல்லியில் இயங்கும் பயிற்சி மையங்களில் 13-க்கு அரசு சீல் வைத்துள்ளது. கட்டிட விதிமுறை மீறல் இதற்கு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதியில் வடிகால் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புல்டோசர் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதெல்லாம் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு என மாணவர்கள் சிலர் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதற்கு காரணமானவர்கள் யார் என்பதை அறிய முறையான விசாரணை வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் பல மாணவர்களை அதிர்ச்சியில் உறைந்து போக செய்துள்ளது என்பதையும் நாம் பேசியதில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.