சென்னை: “ராகுல் காந்திக்கு இந்திய மக்களின் நலத்தை விட 24 மணி நேரமும் அம்பானியை பற்றியும் அதானியை பற்றியும் சிந்தித்து கவலை கொண்டுள்ளார். அவர்களைப் போன்று கோடி கோடியாக சம்பாதிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தால், நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் கொள்ளையடித்த 5000 கோடி ரூபாய் பணத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலே முதலீடு செய்து தொழில் தொடங்குவதை விட்டுவிட்டு இந்தியாவின் சிறந்த தொழிலதிபர்களை ஆதாரமில்லாமல் கண்ணியமிக்க நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டி அவமானப்படுத்துவது அருவருக்கத்தக்கது” என்று தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவையில் பட்ஜெட் விவாத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பட்ஜெட் குறித்து ஆரோக்கியமான விமர்சனத்தை முன்வைக்காமல் பாஜக மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் வெறுப்பை கக்கியுள்ளார். 75 ஆண்டுகளாக காங்கிரஸை கட்டுக்குள் வைத்திருக்கும் குடும்பத்தின் வாரிசான ராகுல் காந்தி, பாஜகவையும், மத்திய அரசையும் பிரதமர் நரேந்திர மோடி கட்டுக்குள் வைத்திருப்பதாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி யாருடைய வாரிசும் அல்ல. அவரது தந்தையோ, தாத்தாவோ அரசியலில் இருந்ததில்லை. தனது திறமையால், கடின உழைப்பால் மக்கள் ஆதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகியிருக்கிறார். நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்றுதான் நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்குள் எந்த முடிவையும் நேரு குடும்பம்தான் எடுக்க முடியும். நேரு குடும்ப உறுப்பினர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் அவர்களுக்கு அடிமைதான். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவின் நகலை, பத்திரிகையாளர் சந்திப்பின்போது கிழித்தெறிந்து தனது ஆணவத்தை வெளிப்படுத்தியவர் ராகுல் காந்தி. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முடியாமல் படுதோல்வி அடைந்தும் அந்த ஆணவம் போகவில்லை. ஆதிக்க மனப்பான்மை தொடர்கிறது என்பதை ராகுலின் பட்ஜெட் விவாத பேச்சு உறுதி செய்கிறது.
அம்பானியும், அதானியும் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வளர்ந்தவர்களா? இந்திரா காந்தி காலத்திருந்து அம்பானியும், ராஜிவ் காந்தி காலத்திலிருந்து அதானியும் தொழில்துறையில் உள்ளனர். தொலைத் தொடர்புத் துறை காங்கிரஸ் ஆட்சியிலும் அம்பானியிடம் தான் இருந்தது. துறைமுகங்களை அதானி குழமத்திடம் கொடுத்ததே காங்கிரஸ் ஆட்சியில்தான். இந்த உண்மைகளை மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்து விருப்பம்போல பொய் மூட்டைகளை ராகுல் அவிழ்த்து விட்டுள்ளார்.
ராகுல் காந்திக்கு இந்திய மக்களின் நலத்தை விட 24 மணி நேரமும் அம்பானியை பற்றியும் அதானியை பற்றியும் சிந்தித்து கவலை கொண்டுள்ளார். அவர்களைப் போன்று கோடி கோடியாக சம்பாதிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தால் , நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் கொள்ளையடித்த 5000 கோடி ரூபாய் பணத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலே முதலீடு செய்து தொழில் தொடங்குவதை விட்டுவிட்டு இந்தியாவின் சிறந்த தொழிலதிபர்களை ஆதாரமில்லாமல் கண்ணியமிக்க நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டி அவமானப்படுத்துவது அருவருக்கத்தக்கது.
நாடாளுமன்றத்திலே பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் மக்களிடையே அவப்பெயரை உருவாக்குவதற்காக, ராகுல் காந்தி தொடர்ந்து திட்டமிட்டு கூச்சலிடுவது குழப்பத்தை விளைவிப்பது தவறான தகவல்களை அளிப்பது உண்மைகளை மறைத்து பொய் பேசுவது என்பதையே வழக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார். இவர் பேச்சின் பின்னணி குறித்தும் தொடர்ந்து நாடாளுமன்றத்திலேயே மதப் பிரிவினை உண்டாக்கும் வகையிலும், மத மோதல்களை ஊக்குவிக்கும் வகையிலும் பேசி வரும் பின்னணியில் ஏதேனும் வெளிநாட்டு சதி உள்ளதா என்று சிந்திக்கின்ற வரையிலே அவர் செயல்பட்டு வருகிறார் என்று கூறினால் அது மிகை இல்லை.
2004 முதல் 2014 வரை பத்தாண்டு கால பொம்மை பிரதமரின் ஆட்சியில், சீனா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கு அடிமைப்பட்ட ஒரு கட்சியின் ஆட்சியாக காங்கிரஸ் ஆட்சி இருந்தது. உலக கார்ப்பரேட் நிறுவனங்களில் வசதிக்காக இந்திய பொருளாதார கொள்கை உருவாக்கப்பட்டு கடன் மிகுந்த நாடாக இந்தியா இருந்ததை மாற்றி கடன்களை அடைத்து வல்லரசு நாடாக, உலகத்தின் தலைசிறந்த பொருளாதார வளர்ச்சி நாடாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.
இத்தாலி இளவரசர் ராகுல் காந்தி, இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் கிராமப்புற விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்கள் அனைவருக்கும் உயர்வை அளிக்கக்கூடிய, மோடி அரசின் மக்கள் நல திட்டங்களை பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் பேசுவதோடு, மிக முக்கியமான ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை முழுவதும் தெரிந்து கொள்ளாமல், எழுதிக் கொடுத்ததை வைத்து படித்து, நடித்து, உலக ஜனநாயகத்தின் ஊன்றுகோலாக திகழும் கண்ணியமிக்க இந்திய நாடாளுமன்றத்தின் இறையாண்மைக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க முயலும் விபரீத வேடிக்கை மனிதராக அடையாளம் காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.