சென்னையிலிருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்குப் பெருமளவு போதைப்பொருள் கடத்தப்படவிருப்பதாகச் சென்னை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள், விமான நிலையம், ரயில் நிலையங்களில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த வகையில் சென்னை அருகே உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த ஒருவரைப் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அவரிடம் விசாரணை நடத்தியதில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பைசல் ரகுமான் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து சுமார் 6 கிலோ போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சென்னை, செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மன்சூர், இப்ராஹிம் ஆகிய இருவரைக் கைதுசெய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களுக்குச் சொந்தமான குடோன் ஒன்றில் சோதனை மேற்கொண்டு, 92 கிராம் போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
மொத்தம் இவர்களிடமிருந்து 6.92 கிலோ கிராம் போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர். இதன் சர்வதேச மதிப்பு 70 கோடி ரூபாய் இருக்கும் என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள் மூவரும் இந்த போதைப்பொருள்களை ராமநாதபுரம் மாவட்டம் வழியாக இலங்கைக்குக் கடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் இருக்கிறதா எனத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.