விராட் கோலியின் இடத்தை யாரால் நிரப்ப முடியும்? – ராபின் உத்தப்பா பதில்

பல்லகெலே,

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்றதும் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து டி20 அணியில் அவர்களுடைய இடத்தை நிரப்பப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் 3 வகையான கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடும் விராட் கோலியின் இடத்தை யாரால் நிரப்ப முடியும்? என்ற கேள்விக்கு இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தனது பதிலை கூறியுள்ளார். விராட் கோலியின் இடத்தை வருங்காலங்கில் நிரப்பும் திறமையை ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் கொண்டிருப்பதாகவும், எனவே அந்த இருவருக்கும் இந்திய அணி சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது , விராட் கோலியின் இடத்தை அந்த இருவராலும் (சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்) ஏன் நிரப்ப முடியாது?. இருவருமே நல்ல வீரர்கள். டி20 கிரிக்கெட்டில் அவர்கள் எந்தளவுக்கு தரமானவர்கள் என்பதை அவர்களின் புள்ளிவிவரங்கள் பேசுகின்றன. இருப்பினும் தொடர்ச்சியாக செயல்படக்கூடியவர் என்ற அடிப்படையில் பார்க்கும் போது ருதுராஜ் புள்ளிவிவரங்கள் கொஞ்சம் நன்றாக இருக்கிறது.

ஆனால் சுப்மன் கில் அதிரடியான பவர் மற்றும் டச் ஆகியவற்றை பெறுவதற்கான பன்முகத் தன்மையை கொண்டுள்ளார். எனவே அந்த இருவரில் ஒருவரை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். எனவே அவர்கள் இருவரையும் இந்திய அணி தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும் என்று நான் கேட்பேன். ஏனெனில் அந்த இருவருமே 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய வீரர்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.