Ravi Shastri, Hardik Pandya Latest News Tamil : இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று இந்திய அணிக்காக விளையாடும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அந்த அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்கவில்லை. சொந்த காரணங்களுக்காக அந்த தொடரில் தன்னை சேர்க்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டதன்பேரில் பிசிசிஐ ஹர்திக் பாண்டியாவை இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவரை சேர்க்கவில்லை. இதை குறிப்பிட்டு பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, ஹர்திக் பாண்டியா இப்படி செய்தால் விரைவில் டி20 அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவை ஏன் கேப்டன்ஷிப்பில் இருந்து நீக்கினீர்கள் என கேட்டதற்கு, அவருடைய பிட்னஸ் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியதை ரவிசாஸ்திரி சுட்டிக்காட்டியுள்ளார். பாண்டியாவின் பிட்னஸ் காரணமாகவே டி20 கேப்டன்சி பறிபோய் இருக்கும் நிலையில், அவர் ஒருநாள் போட்டியில் விளையாடாமல் இருப்பது, எதிர்காலத்தில் இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதை இது காட்டுவதாகவும் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் விளையாடும் அளவுக்கு பிட்னஸ் இல்லையென்றால் அதனை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துவிட்டு முழுநேரமும் டி20 போட்டிகளில் ஆடுவதில் பாண்டியா கவனம் செலுத்தலாம் என்றும் ரவிசாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார்.
” ஒருநாள் போட்டியில் ஆடுமளவுக்கான பிட்னஸ் இருக்குமானால், அதனை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துவிட்டு விளையாடலாம். ஆனால், அவர் அதிக ஓவர்கள் வீச வேண்டியிருக்கும். டி20 போட்டியில் வீசுவதுபோல் மூன்று ஓவர்கள் வீசிவிட்டு இருக்க முடியாது. முழுமையாக பத்து ஓவர்கள் ஒருநாள் போட்டியில் வீச வேண்டும். எட்டு முதல் பத்து ஓவர்கள் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக வீச முடிந்தால், அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடிந்தால் அவர் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கலாம். அதனால், இது குறித்து முடிவெடுக்க வேண்டிய இடத்தில் ஹர்திக் பாண்டியா தான் இருக்கிறார். அவர் தான் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும்” என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன்பாக காயமடைந்து, அதில் இருந்து மீண்டு வந்து விளையாடினார். அதன்பின்னர் 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் அணியில் இடம்பிடித்து விளையாடினார். அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. “ஆனால் அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டார். அதைப்போலவே அவர் தொடர்ச்சியாக விளையாடினால் நிச்சயம் இந்திய அணியில் அவருக்கான இடம் உறுதி. அதனால், எல்லோரையும் விட ஹர்திக் பாண்டியாவுக்கு தான் அவருடைய பிட்னஸ் லெவல் தெரியும். அவரே அவருடைய இடத்தை முடிவு செய்ய வேண்டும்” என்றும் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.