எதிர்வரும் சில மாதங்களில் நாடு முழுவதும் உள்ள முன்னணிப் பாடசாலைகள் 1250ஐ ஸ்மார்ட் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்து, அவற்றை ஒரே வலையமைப்பின் கீழ் கல்வி அமைச்சினால் செயல்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்தார்.
அதற்காக சீனாவிடமிருந்து 20 மில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க பாலிகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றிலிருந்து ஐந்து வரையான சகல வகுப்புகளையும் ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றி, அவற்றை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்வில் கலந்துகொணடு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, தரம் 1 தொடக்கம் 6 இலிருந்து 10 வரையான வகுப்புகளுக்காக அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்வி முறையுடன் தொடர்பான ஸ்மார்ட் வகுப்பு வேலைத்திட்டத்தின் செயற்பாடுகள் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், அதற்கு அவசியமான கற்றல் மொடியூல்கள் தயாரிக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளதாகவும், அம்மொடியூல் புத்தகங்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அச்சிடுவதற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
அவ்வாறு அதற்காக அவசியமான பயிற்சியாளர்களாக ஆசிரியர்களைப் பயிற்றுவக்கும் சவாலை வெற்றி கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த மாற்றம் இடம்பெறாவிட்டால் இன்னும் பத்து வருடங்களில் பாடசாலைகளில் இருந்து வெளியேறும் மாணவர்கள் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியாதவர்களாகக் காணப்படுவார்கள் என்றும் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் சகல கல்விக் கல்லூரிகளையும் ஒன்று சேர்த்து பல்கலைக்கழகமாக மாற்றுவுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.
அதன்படி 2028 ஆம் ஆண்டிலிருந்து, கல்விப் பட்டதாரிகளை மாத்திரமே ஆசிரியர்களாக உள்வாங்கவிருப்பதாகவும், டிப்ளோமா தாரர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலுக்கு உள்வாங்கப்படமாட்டார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வேகமாக மாற்றமடைந்து அறிவியலுக்கு ஏற்ப ஆசிரியர், மருத்துவர்கள் என ஒவ்வொரு தொழில் நிபுணத்துவம் பெற்றவர்களே தங்கள் இவ்வாறான அறிவை உயிர்ப்பிக்கக் கூடியவர்கள் என்றும் கல்வி அமைச்சர் மேலும் விவரித்தார்.
ஆரம்பக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட அழகியல் பாடங்கள் எக்காரணத்தைக் கொண்டும் நீக்கப்பட மாட்டாது என்றும், அது தொடர்பாக உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடம் என்பவற்றுடன், சர்வதேச தரத்திலான பாடசாலைப் பாடவிதானங்களை ஆக்கபூர்வமானதாகவும், உயர்தரத்திலானதாகவும் இவ்வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, 100 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன்படி, மேலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இணைந்து, சர்வதேச அங்கீகாரத்துடனான தரச் சான்றிதழைப் பெற்று தருவதாகவும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜயந்த சகல ஆசிரியர்களிடமும் கோரிக்கை விடுத்தார்.