3-வது முறையாக வெனிசுலா அதிபராக நிகோலஸ் மதுரோ தேர்வு – தேர்தல் முடிவுகள் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: வெனிசுலா அதிபர் தேர்தலில் அதிபர் நிகோலஸ் மதுரோ (Nicolas Maduro) மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேசிய தேர்தல் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்நிலையில், தேசிய தேர்தல் கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட முடிவுகள், மக்களின் வாக்குகளைப் பிரதிபலிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

வெனிசுலா நாட்டில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில், தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் எட்மண்டோ கோன்சலஸ் (Edmundo Gonzalez) களமிறங்கினார். இவர்களுக்கிடையே நேரடி போட்டி நிலவியது. அதாவது, வெனிசுலாவில் 25 வருடங்களாக பொதுவுடமைவாத பிஎஸ்யுவி கட்சி (United Socialist Party of Venezuela) ஆட்சியில் உள்ளது. முதலில், மறைந்த ஹியூகோ சாவேஸ் அதிபராக இருந்த நிலையில், 2013-ல் அவர் புற்றுநோயால் மறைந்தார். அதன்பிறகு, நிகோலஸ் மதுரோ அந்நாட்டின் அதிபரானார். இந்நிலையில், வெனிசுவேலாவில் மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ (Nicolas Maduro) அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 80% ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளதில் அதிபர் மதுரோ 51% வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அவரது முக்கிய போட்டியாளர் எட்முண்டோ கோன்ஸாலேஸ் 44% வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தேசிய தேர்தல் கவுன்சில் (National Electoral Council) அறிவித்துள்ளது. தேசிய தேர்தல் கவுன்சிலின் முடிவுகள் மோசடியான ஒன்று என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது. தேசிய தேர்தல் கவுன்சிலின் (CNE) தலைவர் எல்விஸ் அமோரோசோ, மதுரோவின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படுகிறது.



எதிர்க்கட்சி வேட்பாளர் எட்முண்டோ கோன்ஸாலேஸ் 70% வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அவர்தான் நியாயமான முறையில் அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டவர் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் பலவும் அதிபர் மதுரோவை கோன்ஸாலேஸ் தோற்கடிப்பார் என கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

“தேர்தலில் அறிவிக்கப்பட்ட முடிவு வெனிசுலா மக்களின் விருப்பத்தையோ அல்லது வாக்குகளையோ பிரதிபலிக்கவில்லை” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். வெனிசுலாவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதுரோவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.