பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்திருக்க வேண்டிய நிலையில் தவறிப்போன ஒரு ஷாட்டால் அந்தக் கொண்டாட்டம் நிகழ முடியாமல் போயிருக்கிறது. 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா பதக்கத்தை நெருங்கி வந்து கோட்டைவிட்டு நான்காவது இடம் பிடித்திருக்கிறார்.
10 மீ ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச்சுற்று நேற்று நடந்திருந்தது. இதிலும் அர்ஜூன் நன்றாக ஆடினார். ஆறு சீரிஸ்கள் கொண்ட அந்தச் சுற்றில் மொத்தமாக 630.1 புள்ளிகளை அர்ஜூன் எடுத்திருந்தார். ஒவ்வொரு சீரிஸிலும் அவர் எடுத்திருந்த ஸ்கோர் முறையே 105.7, 104.9, 105.5, 105.4, 104.0, 104.6. இந்த செயல்பாட்டால் அவர் 7 ஆம் இடத்தைப் பிடித்திருந்தார். கடைசி இரண்டு சீரிஸ்களிலும் முந்தைய சீரிஸ்களை போலவே துல்லியமாக அடித்திருந்தால் இன்னும் சிறப்பான ஸ்கோரை எடுத்திருப்பார். ஆனால், தகுதிச்சுற்றில் இதுவே போதுமானதாக இருந்தது. முதல் 8 வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறுவார்கள் எனும் சூழலில் அர்ஜூன் பபுதா 7 ஆம் இடம் பிடித்திருந்தார்.
இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு இதன் இறுதிப்போட்டி நடந்திருந்தது. இதில் தகுதிச்சுற்றில் வென்ற 8 வீரர்களும் கலந்துகொண்டனர். இந்த 8 வீரர்களுக்கும் மொத்தம் 24 ஷாட்கள் சுட வாய்ப்பு கொடுக்கப்படும். இதில் முதல் 10 ஷாட்கள் முடிந்த பிறகு அடுத்த ஒவ்வொரு இரண்டு ஷாட்களின் முடிவிலும் குறைவான புள்ளியை எடுத்திருக்கும் கடைசி வீரர் எலிமினேட் செய்யப்பட்டுக் கொண்டே வருவார். அர்ஜூன் பபுதா ஆரம்பத்திலிருந்தே சிறப்பாகத்தான் ஆடியிருந்தார். முதல் மூன்று இடங்களுக்குள்தான் மாறி மாறி வந்துகொண்டிருந்தார். ஆனால், அவரது 19, 20 இந்த ஷாட்களை ஆடிய போதுதான் பின்னடைவை சந்தித்தார். குறிப்பாக, 20 வது ஷாட்டில் கொஞ்சம் துல்லியத்தன்மையை இழந்து 9.5 புள்ளிகளை மட்டுமே எடுத்தார். இதுதான் அர்ஜூனுக்கு பிரச்சனையாக அமைந்தது.
ஏனெனில், 18 ஷாட்களின் முடிவில் 4 வது இடத்தில் இருந்த குரோயேஷிய வீரர் மிரான் 188.2 புள்ளிகளை எடுத்திருந்தார். அதே சமயத்தில் 3 வது இடத்தில் இருந்த அர்ஜூன் 188.4 புள்ளிகளை எடுத்திருந்தார். குரோயேஷிய வீரர் 19 மற்றும் 20 வது ஷாட்களில் 10.1, 10.7 புள்ளிகளை எடுக்க, அர்ஜூன் 19 மற்றும் 20 வது ஷாட்களில் 10.5, 9.5 புள்ளிகளையே எடுத்தார். இதனால் அர்ஜூன் 208.4 புள்ளிகளில் நிற்க, அந்த குரோயேஷிய வீரர் 209.8 புள்ளிகளுக்கு சென்றார். அர்ஜூன் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் எலிமினேட் செய்யப்பட்டார்
ஆக, அர்ஜூனின் அந்த கடைசி இரண்டு ஷாட்கள்தான் அவரின் கழுத்தை அலங்கரிக்க வேண்டிய பதக்கத்தை கிடைக்கப்பெறாமல் செய்திருக்கிறது. தோல்விதான் என்றாலும் அர்ஜூன் போராடியிருக்கிறார். தகுதிச்சுற்றில் 7 ஆம் இடம் பிடித்துவிட்டு இறுதிப்போட்டியில் டாப் 4 க்குள் நின்று கடும் சவாலளித்ததை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும்.