ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பதவிகளுக்கு நடத்தப்படும் யு.பி.எஸ்.சி தேர்வில் பெயர்களை மாற்றி முறைகேடு செய்யும் சம்பவங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. சமீபத்தில், மகாராஷ்டிராவில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேட்கர், தன் பெற்றோர் பெயர், புகைப்படம் என அனைத்தையும் மாற்றி யு.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு செய்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, அவரது ஐ.ஏ.எஸ் பதவியை ஏன் பறிக்கக்கூடாது என்று கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், யு.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க யு.பி.எஸ்.சி போர்டு விதிகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது. இதன்படி யு.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடுகள் நடப்பதையும், ஆள் மாற்றி தேர்வு எழுதுவதையும் தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு புதிய வரையறைகளை அறிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக யு.பி.எஸ்.சி. போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேர்வு எழுத வருபவர்களின் கைரேகை, ஆதார் கார்டு மூலம் உறுதி செய்யப்படும். அதோடு அவர்களின் ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படமும், அவர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கொடுக்கும் புகைப்படமும் ஒன்றாக இருக்கிறதா என்பதும் பரிசோதித்து உறுதி செய்யப்படும்.
மேலும், தேர்வு மையத்தில் மோசடி நடைபெறுவதை தடுக்க கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்படும். இதன் மூலம் தேர்வு மையத்தில் நடப்பதை யு.பி.எஸ்.சி அதிகாரிகள் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
தேர்வு எழுதுபவர்களின் ஹால்டிக்கெட்டில் க்யூ.ஆர் கோடு இருக்கும். அதை ஸ்கேன் செய்வதன் மூலம் அந்த நபர் ஆன்லைனில் விண்ணப்பித்த போது உள்ள புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை பார்க்க முடியும். இதன் மூலம் ஆதார் கார்டையும், அவரது விண்ணப்பதையும் ஒப்பிட்டு, முகம் ஒன்றாக இருக்கிறதா என்று உறுதி செய்யப்படும். தேர்வு நடைபெறும் இடத்தில் போதிய அளவு பாதுகாப்பு போடப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான வேலைகள், ஜூலை 16-ம் தேதியில் இருந்து தொடங்கப்பட்டிருக்கிறது. யு.பி.எஸ்.சி தேர்வு மட்டுமல்லாது, நீட் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.