சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதையடுத்து மதிமுக கவுன்சிலர் ஜீவன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் மத்திய பட்ஜெட்டில் தமிழக அரசு புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து மத்திய பட்ஜெட்டின் நகலை கிழித்து எறிந்தனர். அதுபோல காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் மத்திய அரசு பட்ஜெட்டின் நகலை கிழித்தெறிந்தனர். அதையடுத்து கேள்வி நேரம் நடைபெற்றது. பின்னர் நேரமில்லா நேரத்தில் 17 உறுப்பினர்கள் பேசினர். அப்போது அவர்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துரைத்தனர். அதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மேயர் பிரியா விளக்கம் அளித்தார்.
இதையடுத்து கூட்டத்தில் மாதச் சம்பளம் பெறுவோர் செலுத்தும் தொழில் வரியை அதிகபட்சமாக 35 சதவீதம் உயர்த்துவதற்கு தமிழக அரசின் அனுமதி கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், வர்த்தகம் செய்வதற்கு வழங்கப்படும் உரிமை கட்டணம் உயர்த்துதல், குறு, சிறு நடுத்தர மற்றும் பெரிய தொழில்களுக்கான உரிமம் உயர்வு உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
மேலும், சென்னையில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடித்து மாட்டுத் தொழுவத்தில் அடைக்கப்படும் மாடு ஒன்றுக்கு அபராத தொகையாக ரூ.5000 வசூலிக்கப்படுகிறது. இத்தொகையை ரூபாய் 10,000 ஆக உயர்த்தவும், மூன்றாம் நாள் முதல் தினமும் ரூபாய் ஆயிரம் பராமரிப்பு செலவாக கூடுதலாக வசூலிக்கவும், இரண்டாம் முறையாகப் பிடிக்கப்படும் மாடுகளுக்கு அபராதத் தொகையை ரூபாய் 15,000 என விதிக்கவும், பராமரிப்புச் செலவை மூன்றாம் நாள் முதல் தினமும் ரூ.1000 கூடுதலாக வசூலிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரையிலான 200 வார்டுகளிலும் மற்றும் ஏழு அரசு மருத்துவமனைகளிலும் தற்போது 390 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அம்மா உணவகங்களில் பாத்திரங்களை பழுது நீக்கவும், இயந்திரங்களைச் சீர் செய்யவும், பழுது நீக்கம் செய்ய இயலாத பாத்திரங்கள் மற்றும் இயந்திரங்களை மாற்றம் செய்யவும் ரூ.7 கோடி நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவற்றையும் சேர்த்து மொத்தம் 70க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.