கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; அதே எண்ணிக்கையிலானோர் காணவில்லை. அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வாசிக்க > “கேரளா இதுவரை கண்டிராத இயற்கை பேரழிவு” – வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை விவரித்த பினராயி விஜயன்
நிலச்சரிவு என்றால் என்ன? – நிலச்சரிவு என்பது பாறைகள், மண் பொருள்கள், குப்பைகள் போன்றவை திடீரென நகர்ந்து ஏற்படுகின்ற ஒரு புவியியல் நிழ்வாகும். இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறு காரணிகளால் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து மழை பெய்வது, கடுமையான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை காரணங்கள் அல்லது அதிக கட்டுமானம், காடுகள் அழிப்பு மற்றும் பயிர் முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட காரணிகளால் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. ஒரு நிலச்சரிவினைத் தூண்டும் காரணிகள் திடீரென ஏற்படுக்கின்றன அல்லது காலப்போக்கில் உருவாகின்றன. இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான ஐந்து நிலச்சரிவுகள்:
கேதர்நாத், உத்தராகண்ட் (2013): இமாலய மலைப் பகுதிகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 5,700 பேர் உயிரிழந்தனர், 4,200-க்கும் அதிகமான கிராமங்கள் அழிந்து போயின. நாடு இதுவரை சந்தித்த மிகவும் மோசமான இயற்கைப் பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
டார்ஜிலிங், மேற்கு வங்கம் (1968): கடந்த 1968-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி திடீர் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் 60 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை 91 துண்டுகளாகிப்போனது. இந்தப் பேரழிவினால் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சொத்துக்கள், உள்கட்டமைப்புகள் தேயிலைத் தோட்டங்கள் பெருமளவிலான சேதத்தைச் சந்தித்தன.
குவஹாத்தி, அசாம் (1948): அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ஒரு கிராமம் ஒட்டுமொத்தமாக புதையுண்டு 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
மாப்லா கிராமம், பிரிக்கப்படாக உத்தரப் பிரதேசம் (1998): கடந்த 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழு நாட்களில் தொடந்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவினால் ஒரு கிராமமே ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு 380-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனால், இந்தியாவின் மிகப் பெரிய மனிதப் பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
மாலின் கிராம், மகாராஷ்டிரா (2014): கடந்த 2014-ம் ஆண்டு கனமழை காரணமாக மகாராஷ்டிர மாநிலம் மாலின் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 151 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காணமல் போயினர்.
இந்தியாவும் நிலச்சரிவு சாத்தியங்களும்: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் டெக்டானிக் (பூமியில் அமைந்துள்ள பகுதி) நிலை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவின் நிலப்பரப்பு ஆண்டு 5 செ.மீ., தூரம் வடக்கு நோக்கி நகர்வதால் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள நிலச்சரிவு வரைபடத்தில், நாட்டில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய சில பகுதிகளைப் பட்டியலிட்டுள்ளது. பனிமூடிய பகுதிகளைத் தவிர இந்தியாவின் 12.6 சதவீத பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் சாத்தியம் கொண்டவை. இவற்றில் 66.5 சதவீதம் வடமேற்கு இமையமலையிலும், 18.8 சதவீதம் வடகிழக்கு இமையமலையிலும், 14.7 சதவீதம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் உள்ளன.
இந்தியாவில் இயற்கை பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005, நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை கையாளுவதற்கு நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பை வழங்குகிறது.