இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்தில் பெருந்தோட்டப் பயிர்களின் ஏற்றுமதி வருமானம் 1118 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பு

தேயிலை, இறப்பர், தென்னை, கறுவா மற்றும் மிளகு போன்ற பெருங்கோட்ட பயிர்களின் ஏற்றுமதி ஊடாக 2024 ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப் பகுதியில் நாட்டிற்கு கிடைத்த ஏற்றுமதி வருமானம் 1118.06 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நேற்று (29) இடம்பெற்ற பெருந்தோட்ட பிரிவின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் நாட்டின் பெருந்தோட்டப் பயிர்களினால் ஈட்டப்பட்ட ஏற்றுமதி வருமானம் 884.6 மில்லியன் டொலர்களாகும். அதன்படி கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் பெறப்பட்ட ஏற்றுமதி வருமானத்தை விட 234 மில்லியன் டொலர்கள் வருமானம் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் பெற முடிந்துள்ளது.

அத்துடன் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் தேயிலை மற்றும் தென்னைப் பயிர்ச் செய்கைகளுக்கு வழங்கப்படும் உர மானியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

தேயிலை தோட்டங்களுக்கு வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிப்பதுடன், தேயிலை தோட்டங்களில் உள்ள வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவும், தேயிலை தூள்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதில் உள்ள சிரமங்களினால் தேயிலையின் தரம் பாதிக்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, இலங்கை தேயிலைத் தோட்டங்களில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள வீதிகளை இலங்கை தேயிலை சபையினால் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக புனரமைப்பதற்கான பணி உத்தரவை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை தேயிலை சபைக்கு ஆலோசனை வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.