பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும் ஜேர்மன் தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியூமன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (2024.07.29) கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை – ஜேர்மன் கைத்தொழில் பயிற்சி நிறுவனத்தை 1959 ஆம் ஆண்டு ஆரம்பித்ததன் மூலம் இலங்கை இளைஞர் சமூகத்திற்கு தொழில்சார் கற்கைநெறிகள் மூலம் பல நன்மைகளை வழங்கியமைக்காக ஜேர்மனிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். தற்போதைய உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிறுவனத்தை மேம்படுத்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இதற்கான ஆதரவையும் நிபுணத்துவத்தையும் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு ஜெர்மனியிடம் கேட்டுக் கொண்டார்.
ஜேர்மனியின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய தூதுவர் இதன் போது இணக்கம் தெரிவித்தார். சுற்றுலா, விமானப் போக்குவரத்து, பொருளாதாரம் மற்றும் கலாசாரத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இதன் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
2024 ஆகஸ்ட் 3 அன்று அலரி மாளிகையில் நடைபெறவுள்ள ’Das Buddhistische Haus in Berlin’ (பெர்லின் பெளத்த மையம், ஜெர்மனி) தாபிக்கப்பட்டு 100வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்கான பிரதமரின் அழைப்பை தூதுவர் ஏற்றுக்கொண்டார். அந்த நிகழ்வில் , ’Das Buddhistische Haus in Berlin – Frohnau, Germany, (1924-2024)’ என்ற புத்தகமும், 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விசேட தபால் முத்திரையும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் ஜேர்மன் தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி கிறிஸ்டினா போஸ்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.