பணம் சம்பாதிப்பது, அதில் ஒரு பகுதியை சேமித்து சரியாக முதலீடு செய்தால் பணத்தை பெருக்குவது எளிது.
`பெரும் பணத்தை சேர்ப்பது, எளிமையானது’ என்பதை புரிந்து கொள்ள உங்களுக்கு பண நிர்வாக படிப்போ, பார்முலாவோ தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
இந்த கட்டுரையில் உங்கள் பணத்தை பெருக்கும் 4 முக்கிய வழிமுறைகளை சற்று விரிவாக காண்போம்.
1 குடும்பத்துக்கு நிதிப் பாதுகாப்பு
டேர்ம் லைஃப் இன்ஷுரன்ஸ் (Term Life Insurance) என்றாலே காத தூரம் ஓடுபவர்களாக நம்மவர்கள் இருக்கிறார்கள். காரணம், அந்தக் காப்பீட்டில் பாலிசிதாரர் உயிருடன் இருந்தால் தொகை எதுவும் கிடைக்காது என்பதாகும் இந்த டேர்ம் பிளான் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நிதி பாதுகாப்பை கொடுக்கும் ஆற்றல் என்பதை உணர வேண்டும்.
ஒருவருக்கு கார் கடன், தனிநபர் கடன், வீட்டுக் கடன் உள்பட பல கடன்கள் இருக்கலாம். அவரின் சம்பளத்தை நம்பி குடும்பத்தினர் இருப்பார்கள். அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு அவர் இந்த உலகில் இல்லை என்றால் குடும்பத்தினர் நிலை என்னவாகும்? இந்த பாலிசியில், கட்டிய பிரீமிய பணம் திரும்பக் கிடைக்காது என்று நினைக்காதீர்கள். இன்ஸூரன்ஸ் என்பது பாதுகாப்பு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
ஒருவர் அவரின் ஆண்டு சம்பளத்தை போல் குறைந்தபட்சம் 15 மடங்கு தொகைக்கு டேர்ம் லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் குடும்ப உறுப்பினர்களுக்கு சரியான நிதி பாதுகாப்பு கிடைக்கும். இந்த பாலிசியை வேலைக்கு சேர்ந்ததும் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைந்தபட்சம் கல்யாணம் ஆன பிறகாவது எடுத்துக் கொள்ளுங்கள். இளம் வயதில் பாலிசி எடுத்தால் பிரீமியம் மிகக் குறைவாக இருக்கும். 25 வயதுள்ள ஒருவர் ரூ.50 லட்சத்துக்கு டேர்ம் பிளான் எடுத்தால் ஆண்டு பிரீமியம் ரூ.7,000தான். பணி ஓய்வு வயதான 58 அல்லது 60 வயது வரைக்கும் இந்த பாலிசியை எடுத்தால் போதும்.
குறைந்த வயதிலேயே இன்ஸூரன்ஸ் எடுத்தால், குறைந்த பிரீமியம் செலுத்தினால் போதும். மேலே குறிப்பிட்ட உதாரணத்துக்கு கணக்குப் பார்த்தால், 600 ரூபாய் மாதம் கட்ட வேண்டி வரும். இப்படி பாலிசி எடுத்து வைக்கும் போது குடும்ப உறுப்பினர்களை நினைத்து கவலைப்பட தேவையில்லை. நிம்மதியான தூக்கம் வரும்; உற்சாகம் பிறக்கும் சிறப்பாக வேலை, தொழில் செய்து அதிகம் சம்பாதிக்க தொடங்குவீர்கள்.
மேலும், யாருக்கு எப்போது வேண்டுமானாலும் விபத்து நேரலாம்; நோய் வாய்ப்படலாம் என்பதால் ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீடு என்கிற ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது அவசியம். இந்த பாலிசி இருக்கும் போது பெரிய மருத்துவச் செலவு வரும்போது கடன் வாங்க வேண்டியிருக்காது.
2 வருமானத்தில் குறைந்தபட்சம் 10 – 20% சேமிப்பு..
குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள், சம்பளம் வாங்குபவர்கள் பணத்தை சேமிப்பது கஷ்டம்தான். இதை ஒரு காரணமாக கூறி சேமிக்காமல் இருக்காதீர்கள். சம்பளம் குறைவாக உள்ளது என்று கூறி, நீங்கள் முழுவதையும் செலவு செய்தால், சம்பளம் அதிகமாகும் போது கூடுதலாக செலவு செய்யும் வாய்ப்புகளை உங்கள் மனம் உருவாக்கி கொடுக்கும். பணத்தை சேமிக்க வழி கிடைக்காமல் போகும்.
எனவே, உங்கள் வருமானம் எதுவாக இருந்தாலும் குறைந்தபட்சம் 10 – 20% சேமிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். உதாரணத்துக்கு மாதச் சம்பளம் ரூ.25,000 என்றால் அதில் 10% ரூ.2,500 சேமியுங்கள். இதுவே சம்பளம் ரூ.50,000 என்றால் அதில் 20% ரூ.10,000 சேமியுங்கள். இதுவே சம்பளம் ரூ.1 லட்சம் என்றால் அதில் 30% அதாவது ரூ.30,000 சேமியுங்கள். இப்படி சம்பளம் அதிகரிக்க அதிகரித்து சேமித்து வந்தால் கடன் வாங்க வேண்டி வராது. செல்வமும் சீக்கிரம் சேரும்.
3 கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை
கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை ஒவ்வொரு மாதமும் கஷ்டப்பட்டாவது முழுமையாக செலுத்தி விடுங்கள். .
வேலைக்கு சேர்ந்து வருமானம் வருவது தெரிந்த உடன், வங்கிகள் கிரெடிட் கார்டு கொடுக்கத் தொடங்கி விடுகின்றன. ஒருவர் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கிரெடிட் கார்டை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும். கிரெடிட் கார்டு என்பதை சிலர் கூடுதல் வருமானம் என்று நினைத்து தேவையில்லாமல் ஷாப்பிங் செய்து மாட்டிக் கொள்கின்றனர்.
கிரெடிட் கார்டுகளுக்கு உரிய காலத்தில் செலுத்தாத தொகைக்கு மாதம் 3-4% வட்டி என வருடத்திற்கு 36-48% வட்டி செலுத்தும் நிலையில் பலரும் மாட்டிக் கொள்கின்றனர்.
கிரெடிட் கார்டு வட்டிதான் இருப்பதிலேயே அதிகம் என்பதால் வேறு ஏற்பாடு செய்து அல்லது தனிநபர் கடன் வாங்கியோ, தங்க நகை அடமானக் கடன் வைத்தோ கூட கிரெடிட் கார்டு கடனை அடைத்து விடுங்கள். கிரெடிட் கார்டு கடன் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். கடன் இல்லை என்றால் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
4. முதலீடுகளை சிக்கலாக்க வேண்டாம்..!
பல்வேறு சோசியல் மீடியாக்களில் ஆசையை தூண்டும் விளம்பரங்களை பார்த்து, அதிக பணம் கிடைக்கும் என்று சூதாட்டம் போன்ற மோசடி திட்டங்களில் முதலீடுகளை செய்யாதீர்கள். பொன்ஸி திட்டங்களில் முதலுக்கே மோசம் ஏற்படும்.
மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்ட குறுகிய கால தேவைகளுக்கு ரிஸ்க் இல்லாத வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.
நீண்ட கால முதலீட்டுக்கு பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியமாகும். அதற்கு முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் குறியீடு சார்ந்த இண்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்களில் (Index Mutual Funds) சீரான முதலீட்டுத் திட்டம் என்கிற எஸ்.ஐ.பி (SIP) முறையில் செய்து வரலாம். முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்கத் தயார் என்பவர்கள் ஆக்டிவ் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து வரலாம்.
இப்படி செய்யும் போது தேவையில்லாத செலவுகள் குறையும்; கடன் வாங்க வேண்டியது இருக்காது. இந்த நிலையில் உங்கள் பணம் பெரும் என்பது நிச்சயமாகும்.