பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும் அம்மாநிலத்தில் 371 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட 55 சதவீதம் அதிக மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் பெய்த கனமழையால் 106 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும், இதுவரை 44 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஷிவ்மோகா, உடுப்பி, சிக்மகளூர், தட்சிண கன்னடா மற்றும் குடகு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. உத்தரகன்னடா, ஹாசன் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தட்சின கன்னடா மாவட்டத்தில் 114.4 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் 31 தாலுகாக்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.