இந்த நாட்களில் சிறுவர்களிடையே இன்புளூவன்ஸா அறிகுறிகள் மற்றும் மேல் சுவாசக்குழாய் வைரஸ், காய்ச்சல் நிலை என்பன அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல் இணையத்தளத்திற்கு இன்று (30) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சளி பரிசோதனை செய்வதன் மூலம் இத் தொற்று இன்புளூவன்ஸா என்பதை அறிந்துகொள்ள முடியும் என்றும், மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி என்பன தொடர்ச்சியாகக் காணப்பட்டால் (antibiotics) நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், இருமல் நீடித்தால் முச்சுத்திணறல் ஏற்படும் என்பதால், அதற்கான தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையயில்…
இந்த நோய் அறிகுறி உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். நோய் அறிகுறி உள்ள குழந்தைகளை வீட்டில் தங்க வைக்க வேண்டும். அவர்களுக்கு இயற்கையான திரவ உணவு வகைகளை அதிகமாக வழங்கி அவர்களுக்கு அதிக ஓய்வு வழங்க வேண்டும். அத்துடன், உரிய நேரத்திற்கு உரிய அளவு பரசிட்டமோல் மருந்தினை வழங்க வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.
இந்த வைரஸ் நோய் அறிகுறிகளாக, காய்ச்சலுடனான தலைவலி, இருமல், சளி, தும்மல், உடல்வலி ஆகியவை அடங்கும், மேலும் இதுபோன்ற அறிகுறிகள் வகுப்பறை மற்றும் தினசரி பராமரிப்பு மையங்கள் மற்றும் வீடுகளில் விரைவாக பரவக்கூடியதாக இருந்தால், இது மேல் சுவாசக்குழாய் தொற்று அல்லது இன்புளுர்வன்ஸாவாக இருக்கலாம் என்றும் மருத்துவர் கூறினார்.
எமது நாட்டில் இன்புளுவன்ஸா A மற்றும் B ஆகிய இரண்டிற்கும் நேர்மறையாக இருப்பவர்களை நாம் காணமுடியும் என்றும் இது பொதுவாக குளிர் நாடுகளில் குளிர்காலத்தில் ஏற்படும் நோய் என்றும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
அத்துடன், 02 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், நாள்பட்ட சுவாச நோய்கள் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் போன்றவர்களுக்கு இத்தொற்று மிக வேகமாக பரவக்கூடும் என்றும், இந்த நாட்களில் டெங்குவும் தொற்று பரவலாகக் காணப்படுவதால், 03 அல்லது 04 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், இரத்தப் பரிசோதனையொன்றை மேற்கொள்வது சிறந்தது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.