புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவரை உடனடியாக விடுவிக்கக் கோரி இண்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பஞ்சாப் முதல்வர் பகந்த் மான், கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், ஆம் ஆத்மி தலைவர்கள் கோபால் ராய், ராகவ் சத்தா, காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய டி.ராஜா, “டெல்லி முதல்வரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவரது உடல்நிலை கவலை அளிப்பதாக உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, ஜனநாயகம் மக்களுக்கானது அல்ல என்ற நிலை உருவாகிவிட்டது. ஜனநாயகம் மக்களிடமிருந்து ‘தொலைவில்’ உள்ளது. மோடி அரசு பயன்படுத்தும் மத்திய அமைப்புகளால் பாதிக்கப்பட்டவர்களில் கேஜ்ரிவால் ஒருவர். இதை அனுமதிக்க முடியுமா? இன்னும் எவ்வளவு காலம் நாட்டில் இந்த நிலைமையை பொறுத்துக்கொள்ள முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் கோபால் ராய் பேசுகையில், “கேஜ்ரிவாலின் சர்க்கரை அளவு குறைந்து வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. விசாரணை நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அவரை சிறையில் அடைக்க சதி செய்யப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்களை ஏன் சிறையில் அடைக்க பாஜக விரும்புகிறது? டெல்லியில் பயிற்சி மையத்தில் நீரில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்ததற்கு யார் பொறுப்பு?
இந்தச் சம்பவம் குறித்து துணைநிலை ஆளுநரிடம் கேட்கப்பட்டபோது, அவர் அமைதியாக இருக்கிறார். கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரும் பாஜக, அவர்கள் பொறுப்புக் கூறும்போது ஓடிவிடுகிறார்கள்” என்று சாடினார்.
போராட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகோய், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அநீதி இழைக்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்குமாறு மல்லிகார்ஜுன் கார்கேவும், ராகுல் காந்தியும் எங்களுக்கு அறிவுறுத்தினர். அவர் சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் அரசு அவரை விடுவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் விடுவிக்கவில்லை.
ஒரு கோழைத்தனமான அரசாக மோடி அரசு உள்ளது. அவர்கள் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் பாஜகவின் மாயை தகர்ந்துவிட்டது. 2024-ல் நியாயமான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்திருந்தால், பாஜக எதிர்க்கட்சியாக இருந்திருக்கும். நாங்கள் ஆட்சியில் இருந்திருப்போம். பாஜக தலைமையிலான அரசாங்கம் அதன் ஐந்தாண்டு காலத்தை முடிக்கப் போவதில்லை.” என்று தெரிவித்தார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசும்போது, “ஆம் ஆத்மி கட்சி ஜந்தர் மந்தர் மற்றும் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் இருந்து உருவான அரசியல் கட்சி. இந்தக் கட்சி சாதாரண மக்களை எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர், முதல்வர் ஆக்கியது. இந்தக் கட்சி சாமானிய மக்களின் நலனைப் பற்றி சிந்திக்கிறது. கேஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.
போராட்டத்தில் உரையாற்றிய சுனிதா கேஜ்ரிவால், “தீவிர அரசியல் சதி காரணமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். அவரது ஓர் அறிக்கைக்காக அமலாக்கத்துறை அவரை சிறையில் அடைத்தது. மகுந்தா ரெட்டி தனது அறக்கட்டளைக்காக நிலம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருமுறை மட்டுமே சந்தித்துள்ளார். அவரது மகனை அமலாக்கத்துறை சிறையில் அடைத்தது. இது ஒரு சதி வழக்கு” என தெரிவித்தார்.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மார்ச் 21 அன்று அமலாக்கத்துறை இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார். கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் அவர் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்றுள்ளார். இருப்பினும், சிபிஐ தொடர்பான வழக்கில் அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.