“சமூக நீதி பேசும் திமுகவினரே நிர்மலா சீதாராமனின் சமூகத்தை தாக்கிப் பேசுவது சரியல்ல” – வானதி சீனிவாசன்

கோவை: “சமூக நீதி பேசும் திமுகவினர், மத்திய நிதி அமைச்சரையும், அவரது சமுதாயத்தையும் தாக்கிப் பேசவது சரியானதல்ல” என, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் காத்திருப்போர் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு வானதி சீனிவாசன் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஐந்து இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தவும், காத்திருப்புக் கூடம் அமைக்கவும் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து சிறப்பு சிகிச்சைகளுக்காக அதிக எண்ணிக்கையில் மக்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

இங்கு மக்கள் காத்திருப்பதற்கான இட வசதி முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக, பிரசவ சிகிச்சை பிரிவின் அருகே பெண்கள் மற்றும் குழந்தைகள் காத்திருப்புக் கூடம் அமைக்க ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனைக் கட்டிடத்தில் முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு தற்போது வரை முழுமையாக செயல்படவில்லை. அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்.



மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுவது மரபு சார்ந்த விஷயமாக இல்லை. மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு பதிலாக தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் நடத்தி வருகிறார். தமிழகத்தில் இருந்து தேர்வான எம்பி-க்களும் தனிமனித தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, மத்திய நிதி அமைச்சரையும் அவர் சார்ந்த சமுதாயத்தையும் தாக்கிப் பேசுகின்றனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பிராமணர்கள் குறித்து விமர்சிப்பதை தொடர்ந்து செய்து வருகிறார். சமூக நீதி பேசும் திமுகவினர் இதைச் செய்வது சரியல்ல.

தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல் பெருகி உள்ளது. ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் இந்த ஆட்சியில் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

சாதிவாரி கணக்கெடுப்பை மாநிலங்களே மேற்கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயம் மற்றொரு மாநிலத்தில் குறைவாக இருக்கும். எனவே, மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம். திமுக அரசுக்கு தைரியம் இல்லாததால் இதைச் செய்யாமல் உள்ளனர். இது குறித்து திரும்பத் திரும்ப மத்திய அரசிடம் கேட்பது என்பது பொறுப்பைத் தட்டிக் கழிப்பது போன்றது. கோவை முன்னாள் மேயர் காலகட்டத்தில் ரூ. 27 லட்சம் டீ செலவு காண்பிக்கப்பட்டது குறித்து கோவை மாநகராட்சிக்கான புதிய மேயரை தேர்ந்தெடுக்க வரும் உதயநிதி பதிலளித்தால் நன்றாக இருக்கும்” என்றார் வானதி சீனிவாசன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.