`சிவாஜி கார்மீது கல்லெறிந்த மக்கள்; தடுத்த அப்பா!'- சுப்பையா IAS நினைவு பகிரும் ஜெயந்தி கண்ணப்பன்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஏகப்பட்ட ஹிட் படங்களைத் தயாரித்தவர் ஏ.எல். சீனிவாசன். கவிஞர் கண்ணதாசனின் அண்ணனான இவர் `சாரதா’ ஸ்டூடியோஸ் என்கிற பேனரில் தயாரித்த படங்களில் `கந்தன் கருணை’, `திருடாதே’, `பணம்’, `சினிமா பைத்தியம்’, ‘மணி ஓசை’, ‘சாரதா’, ‘ஆனந்தி’, ‘சாந்தி’ முதலான படங்கள் குறிப்பிடத்தக்கவை.

சுப்பையா ஐ.ஏ.எஸ்

இவரது  மறைவுக்குப் பிறகு ஏ.எல்.எஸ். புரொடக்‌ஷன் என்ற பெயரில் அவரது மகன் கண்ணப்பன் சினிமா தொழிலில் ஈடுபட்டு வந்தார். கண்ணப்பனின் மறைவுக்குப் பிறகு சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் தற்போது ஏ.எல்.புரொடெக்சனை நிர்வகித்து வருகிறார்.ஜெயந்தி கண்ணப்பனின் தந்தை, மறைந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.எஸ்.சுப்பையா. இவரது 50வது நினைவு தினத்தை நேற்று முன் தினம் அனுஷ்டித்தனர் ஏ.எல்.எஸ் குடும்பத்தினர்.

அப்பாவின் நினைவுகள் குறித்து ஜெயந்தி கண்ணப்பனிடம் பேசினோம்.

”அப்பாவின் பூர்வீகம் வீரவநல்லூர். அதனால பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தீர்த்தபதி பள்ளியில் முடிச்சுட்டு கல்லூரி சேர்வதற்குச் சென்னைக்கு வந்தார். பிரெசிடென்ஸி காலேஜ்ல படிச்சிட்டிருக்கிறப்பவே எழுத்து, பேச்சுன்னு அந்த ஏரியாவுலயும் தன் திறமையைக் காட்டினார். அதனால படிச்சு முடிச்சதுமே டெல்லி அகில இந்திய வானொலியில் வேலை கிடைச்சது. அங்க சில வருஷம் வேலை பார்த்துட்டு பணி மாறுதலாகி சென்னை வானொலிக்கு வந்தார். சென்னை வந்த பிறகே அப்பாவுக்கு சிவில் சர்வீஸ் கனவு வந்தது. ரேடியோ ஸ்டேஷனில் வேலை பார்த்துகிட்டே ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாரானார்.

அதாவது அந்தக் காலத்துலயே நேரடி ஐ.எ.எஸ். தேர்வுக்குத் தயாரானார். எழுத்து, வாய்மொழித் தேர்வுனு ரெண்டு கட்டத் தேர்வையும் வெற்றிகரமா முடிச்சதும் முசௌரியில பயிற்சி. அங்க அப்பாவுடைய பேட்ஜ்மேட் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன். முசௌரி பயிற்சி முடிஞ்சதும் முதல் போஸ்டிங் சேலம் துணை ஆட்சியர்.

ஜெயந்தி கண்ணப்பன்

பிறகு புதுக்கோட்டை சப் கலெக்டர். அடுத்து கடலூர் மாவட்டத்துல கலெக்டராகவும் இருந்தாங்க. ட்ரான்ஸ்பர்ல செகரட்டரியேட் வந்து முக்கியமான பல துறைகள்ல செயலாளரா திறம்படப் பணி புரிஞ்சார். முதலமைச்சர்களா காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, கலைஞர் ஆகியோர் இருந்தப்ப அவங்களுடைய அரசுகள்ல முக்கியத் துறைகள்ல அப்பா இருந்தார்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்ட போது அதுல அப்பாவுக்கு முக்கியப் பங்கு இருந்துச்சு.  மேலே சொன்ன முதலமைச்சர்களிடம் பணிபுரிந்தப்போ அவங்களுடைய நம்பிக்கைக்குப் பாத்தியமான அதிகாரியா பெயரெடுத்தார்.

அப்பாவுடைய திறமைக்கு அவர் தலைமைச் செயலாளரா வந்திருக்க வேண்டியது. ஆனா துரதிஷ்டவசமா அவர் சர்வீஸ்ல இருந்தப்பவே அதாவது தன்னுடைய 54வது வயசுலயே இறந்துட்டார். அப்பா மறைஞ்சு இந்த ஜூலையுடன் ஐம்பது ஆண்டுகள் கடந்திடுச்சு” என்ற ஜெயந்தி கண்ணப்பன் தனது தந்தையின் பதவிக் காலத்தில் நடந்த இரண்டு மறக்க முடியாத சம்பவங்களையும் குறிப்பிட்டார்..

”புதுக்கோட்டையில் அப்பா வேலை பார்த்திட்டிருந்த சமயம் அது. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படம் வெளியாகியிருக்கு. அந்தப் படத்துல புதுக்கோட்டை மன்னர் குறித்து சில சர்ச்சைக்குரிய வசனங்கள் இருந்ததுன்னு அந்த ஊர் மக்கள் எதிர்ப்புத் தெரிவிச்சுட்டிருக்காங்க. அந்த நேரம் பார்த்து அந்த ஏரியாவுல ஒரு நிகழ்ச்சியில கல்ந்துக்கிறதுக்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அங்க வந்திருக்கார்.

அண்ணா, கலைஞருடன்

இது தெரிஞ்ச மக்கள் அவர் வந்திருந்த இடத்தைக் கண்டுபிடிச்சு எதிர்ப்பு தெரிவிக்க வந்துட்டாங்க.  கிட்டத்தட்ட சிவாஜி இருந்த காரைக் கண்டுபிடிச்சுட்ட மக்கள் காரை நோக்கி கற்களை வீச, சுதாரிச்சுகிட்ட சிவாஜி காரை வழியில இருந்த கலெக்டர் பங்களாவுக்குள் விடச் சொல்லிட்டாராம். அதுக்குள் அப்பாவுக்கும் தகவல் போயிட, உடனே சிவாஜிக்குத் தேவையான பாதுகாப்பைத் தர உத்தரவிட்டிருக்கார் அப்பா. பிறகு மக்கள் நடமாட்டம் குறைஞ்ச நேரம் பார்த்து அங்கிருந்து சிவாஜியைப் பத்திரமா அனுப்பி வச்சிருக்காங்க. திருச்சி வரைக்கும் தன் கார்ல சிவாஜி காருக்குப் பின்னாடியே வந்து அவரை வழியனுப்பி வச்சிருக்கார். அப்பாவின் இந்தச் செயலுக்காக அப்போது பலரும் அப்பாவைப் பாராட்டியிருக்காங்க.

அதேபோல இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டுல தீவிரமா இருந்த நேரத்துல அப்பா கடலூர் கலெக்டர். சிதமபரம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்களும் போராட்டத்துல இறங்கினாங்க. அப்ப போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதுல ராஜேந்திரன்னு ஒரு மாணவர் இறந்துட்டார். அப்போ இந்த சம்பவம் பெரிய பிரச்னையாகி அரசுக்குக் கெட்ட பெயரை உண்டாக்கிடுச்சு.

மனைவியுடன் சுப்பையா ஐ.ஏ.எஸ்

இதுல என்ன நடந்ததுன்னா சம்பவம் நடந்த நாளுக்கு முந்தைய நாள் அப்பா அலுவல் விஷயமா சென்னை வந்துட்டார். அப்பாவிடம் அனுமதி வாங்காமலே மாவட்ட எஸ்.பி துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டுட்டார். அதனால சம்பந்தப்பட்ட அந்த எஸ்.பி மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கையை எடுக்க அப்பா உத்தரவிட்டார். இன்னைக்கும் நாங்க சிதம்பரம் போனா அங்க பல்கலைக் கழகம் முன்னாடி இருக்கிற அந்தத் தம்பியின் சிலையைப் பார்க்கறப்ப அப்பாதான் எங்களுக்கு எங்க கண் முன்னாடி வருவார்” என நெகிழ்ச்சியுடன் முடித்தார் ஜெயந்தி ஏ.எல்.எஸ். கண்ணப்பன்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.