கொல்கத்தா,
ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் இன்று அதிகாலை மும்பை நோக்கிச் சென்ற மும்பை – ஹவுரா பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரெயிலின் 18-பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் நாட்டில் அடுத்தடுத்து ரெயில் விபத்துகள் நேரிடுவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடிய மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய அரசின் அலட்சியப் போக்கிற்கு முடிவு கிடைக்காதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மற்றொரு பேரழிவுகரமான ரெயில் விபத்து! இன்று அதிகாலை ஜார்க்கண்டில் உள்ள சக்ரதர்பூர் பிரிவில் மும்பை – ஹவுரா பயணிகள் ரெயில் தடம் புரண்டது. பல உயிரிழப்புகள் மற்றும் ஏராளமானோர் காயமடைந்துள்ளது கவலையளிக்கிறது.
நான் தீவிரமாகக் கேட்கிறேன்: இது ஆட்சியா? கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் ரெயில் பாதைகளில் மரணங்கள் மற்றும் படுகாயமடைவது முடிவின்றி தொடர்கிறது. இதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்வது? இந்திய அரசின் அலட்சியப் போக்கிற்கு முடிவே இல்லையா?. மேலும் இந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.