நம்பிக்கையில்லா தீர்மானம்: சுற்றுலா போன கவுன்சிலர்கள்… காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பியது எப்படி?!

சர்ச்சையில் காஞ்சிபுரம் மேயர்!

புதிதாக தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சிக்குக் கடந்த 2022-ம் ஆண்டில் தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 51 இடங்களில் திமுக 33 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், அதிமுக ஒன்பது இடத்திலும், பாமக இரண்டு, பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக தலைமை மகாலட்சுமி யுவராஜை வேட்பாளராக அறிவித்தது. கட்சித் தலைமை அறிவித்ததைத் தாண்டி, திமுகவைச் சேர்ந்த சூர்யா என்பவரும் மேயர் தேர்தலில் போட்டியிட்டார்.

கவுன்சிலர் புகார்

இருந்தபோதிலும், நடந்து முடிந்த மேயர் தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்று மகாலட்சுமி மேயராக வெற்றிபெற்றிருந்தார். மேயர் தேர்தல் தொடங்கி, காஞ்சிபுரம் மாநகராட்சி சர்ச்சைகள் நிறைந்தே காணப்படுகிறது. மாநகராட்சி ஆணையருக்கு எதிராக பல்வேறு பிரச்னைகள் எழுந்த நிலையில், ஆணையரும் மாற்றப்பட்டார். மீண்டும் புதிதாக வந்த ஆணையரும் ஒரு தரப்பினருக்கு மட்டுமே சாதகமாகச் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

கவுன்சிலர்கள் போர்க் கொடி!

இந்த சூழலில் மேயர் மகாலட்சுமியின் கணவர் யுவராஜ் தலையீடு மாநகராட்சியில் அதிகமாக இருக்கிறது. மேயரும் ஒரு சாராருக்கு மட்டுமே ஆதரவாகச் செயல்படுகிறார். இதனால் எங்களால் வார்டு பணியைச் செய்யமுடியவில்லை என்று திமுக கவுன்சிலர்களே போர்க் கொடி தூக்கினர். அதோடு மட்டுமின்றி, அதிமுக, பாஜக, பாமக, திமுக உட்பட 30 கவுன்சிலர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று மனு கொடுத்தார்கள். விஷயம் கைமீறிப் போவதை அறிந்த மாவட்டச் செயலாளர் சுந்தர், அதிருப்தி கவுன்சிலர்களை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தை தோல்வியில்தான் முடிந்தது.

கே.என்.நேரு பேச்சுவார்த்தை

அடுத்ததாக துறை அமைச்சர் கே.என்.நேரு கவுன்சிலர்களை அழைத்துப் பேசி சமரசம் செய்து அனுப்பிவைத்தார். சரி என்று சொல்லிச் சென்ற கவுன்சிலர்கள் மீண்டும் மேயரை மாற்றவேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களிடம் கவுன்சிலர்கள் 20 பேர் மனு கொடுத்தது நிலைமையை இன்னும் மோசமாகியது. இதனைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் பத்து பேர் தங்களுக்கு வழங்கப்பட நிலைக்குழு உறுப்பினர்கள் பதவியையும் ராஜினாமா செய்வதாக ஆணையரிடம் கடிதம் வழங்கினர். தொடர்ந்தும் பொறுப்பு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைத்துப் பேசியும் கவுன்சிலர்கள் யாரும் சமாதானம் ஆவதாகத் தெரியவில்லை. அனைவருமே என்ன நடக்கிறது என்பது குறித்து கட்சித் தலைமைக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

இந்நிலையில் இந்த மாதம் 29-ம் தேதி மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கவுன்சிலர்கள் அனைவர்க்கும் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கடிதம் அனுப்பியிருந்தார். மொத்தம் 51 கவுன்சிலர்கள் இருக்கும் நிலையில், தீர்மானத்தை நிறைவேற்ற ஐந்தில் நான்கு பங்கு உறுப்பினர்கள் அதாவது 41 பேர் வாக்களிக்க வேண்டும். அதேபோல தீர்மானத்தை நிராகரிக்கவும் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் வாக்களிக்க வேண்டும். 13-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மேயருக்கு ஆதரவாக ஆதரவாகவும். 33-க்கும் அதிகமானோர் மேயருக்கு எதிராகவும் இருந்தார்கள்.

சுற்றுலாவுக்கு செல்லும் கவுன்சிலர்கள்

நேற்று (29-ம் தேதி) வாக்கெடுப்பு நடைபெறூவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக எதிராக இருந்த கவுன்சிலர்கள், ஆதரவு கவுன்சிலர்கள் குடும்பத்துடன் தனி பேருந்து மூலம் இ.சி.ஆரில் உள்ள சொகுசு விடுதிக்குச் சென்றுவிட்டனர். இதனால் எதிர்ப்பு நிலையிலிருந்த கவுன்சிலர்கள் யாரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது. அதுபோலவே வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாருமே கலந்துகொள்ளவில்லை. யாரும் வராததால் வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததாக மாநகராட்சி ஆணையர் அறிவித்தார். இதனால் காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமியே தொடர்வார்.

பின்னணியில் என்ன நடந்தது?

கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து காஞ்சிபுரம் திமுகவினர் சிலரிடம் பேசினோம். “பிரச்னை ஆரம்பித்தது முதலே கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருந்தது. மாவட்டச் செயலாளர் சுந்தர், துறை அமைச்சர் கே.என்.நேரு, பொறுப்பு அமைச்சர் தா.மோ.அன்பரசன் என அனைவருமே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திவிட்டார். இருந்தபோதிலும் மேயரை மாற்றியே தீரவேண்டும் என்பதில் எதிர்ப்பு கவுன்சிலர்கள் மிகவும் உறுதியாக இருந்தனர். தலைமை அழைத்துப் பேசியும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர மனு அளிக்கப்பட்டிருந்தது. நெல்லை, கோவையைப் போலக் காஞ்சி மேயரை மாற்றும் எண்ணத்தில் கட்சித் தலைமை இல்லை. இதனால், எதிராக உள்ள திமுக கவுன்சிலர்களை பேசி சமரசம் செய்ய முடிவு செய்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம் | கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

கட்சித் தலைமை அழைத்துப் பேசியிருந்த நிலையில், திமுக இணை­ அ­மைப்­புச் செய­லா­ளர் அன்பகம் கலை கடந்த சில தினங்களுக்கு முன்பாக காஞ்சிபுரம் சென்றிருந்தார். அங்கே எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்களை அழைத்து சமாதானம் பேசியிருக்கிறார். அதே சமயத்தில் யுவராஜ் இளைஞரணியில் இருப்பதால் உதயநிதி தரப்பும் மாவட்டச் செயலாளர் சுந்தரை அழைத்துப் பேசியிருக்கிறது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தீர்மானம் நிறைவேற 41 கவுன்சிலர்கள் வாக்களிக்க வேண்டும், தற்போதைய நிலையில் 33 பேர் மட்டுமே எதிர்ப்பாக இருக்கும் நிலையில் அனைவரும் வாக்களித்தால் தீர்மானம் நிறைவேறாது. கட்சியைப் பகைத்துக்கொண்டு நிறைவேறாத தீர்மானத்தில் எதற்காகக் கலந்துகொள்ள வேண்டும் என்று கவுன்சிலர்கள் பேசியிருக்கிறார்கள். எனவேதான் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் அனைவருமே தவிர்த்துவிட்டார்கள்” என்றார்கள் விரிவாக.

இப்போதைக்கு வாக்கெடுப்பு தோல்வியில் முடிவடைந்திருந்தாலும், காஞ்சிபுரம் விவகாரம் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது என்பதே உண்மை களநிலவரம்..!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.