அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபர தரவுகளின்; அடிப்படையில் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, வீடுகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள், பொது இடங்களான அரச கட்டிடங்கள், பாடசாலைகள், மேலதிக நேர (டியூஷன்) வகுப்பறைகள், மத வழிபாட்டுத் தலங்கள், கட்டுமான பணிகள் நடைபெறும்; கட்டிடங்கள் போன்றவற்றில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளது.
தற்போதைய மழையுடனான காலநிலையினால் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளதாகவும் கடந்த மாதங்களை விட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சிறிதளவு அதிகரிப்பு காணப்படுவதாகவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார்.
டெங்கு நுளம்புகள் அதிகளவில் பரவும் இடங்களாக அடையாளம் காணப்பட்ட மேற்குறிப்பிட்ட பொது இடங்களின் உரிமையாளர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்தி, டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்ய வாரத்தில் ஒரு நாளில் சில மணித்தியாலங்கள் செலவிட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.