கொல்கத்தா: மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கார்கே காங்கிரஸ் தலைவரான பிறகு கட்சியில் உள்ள அனைத்து பதவிகளும் தற்காலிகமாகி விட்டதாக தெரிவித்தார்.
கடந்த ஜூன் 21-ம் தேதி அன்று கொல்கத்தாவில் மேற்கு வங்க காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மிர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி உட்பட செயற்குழுவை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து நேற்று (ஜூலை 29) காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய குலாம் அகமது மிர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை ‘முன்னாள் தலைவர்’ என்று குறிப்பிட்டுப் பேசினார். இதன் மூலம் தான் முன் அறிவிப்பு எதுவுமின்றி தான் நீக்கப்பட்டதை தெரிந்து கொண்ட ஆதிர் ரஞ்சன் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் பிறகு இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி தலைமை மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: “மல்லிகார்ஜுன கார்கே கட்சித் தலைவராக பதவியேற்ற நாளில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளும் தற்காலிகமாகிவிட்டன. எனது பதவியும் தற்காலிகமாகிவிட்டது.
தேர்தல் நடந்துகொண்டிருந்த சமயத்தில், தேவைப்பட்டால் என்னை ஒதுக்கி வைப்பேன் என்று மல்லிகார்ஜுன கார்கே தொலைக்காட்சியில் கூறியது என்னை வருத்தமடையச் செய்தது.
நான் எனது ராஜினாமாவை கார்கேவுக்கு அனுப்பியிருக்கிறேன், ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை யாரும் எனக்குத் தெரிவிக்கவில்லை. எனது கடிதத்துக்கு கார்கே இதுவரை பதிலளிக்கவில்லை. அது ஏற்றுக்கொள்ளப்பட்டால், மரியாதையின் அடிப்படையில் எனக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்” இவ்வாறு ஆதிர் ரஞ்சன் தெரிவித்தார்.
முன்னதாக மேற்கு வங்க மாநிலத்தில் அராஜகம் நடக்கிறது. பொதுமக்களை பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.