யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நீதி வழங்கப்பட்டுள்ளது

• போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முப்படைகளின் உயரிய பங்களிப்பு.

 

• சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்வி வசதிகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

 

• அதிக மாணவர்கள் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

• சிவில் மருத்துவ மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு ஆரம்பம்.

 

• பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பரிந்துரைத்த இஸட் புள்ளி அடிப்படையில் மாத்திரமே ஆட்சேர்ப்பு – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன(ஓய்வுபெற்ற).

யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் கொடுப்பனவுகள், மருத்துவ புனர்வாழ்வு மற்றும் வாழ்நாள் முழுவதும் பராமரிப்பை வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் ஊடாக, பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் மூலம் அதிகபட்ச நீதியை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன தெரிவித்தார்.

 

கடந்த இரண்டு வருடங்களில், பாதுகாப்பு அமைச்சு நாட்டை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஸ்திரப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், மக்களுக்கு சிறந்த பாதுகாப்பான சூழலை உறுதி செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

”இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன(ஓய்வுபெற்ற) இதனைக் குறிப்பிட்டார்.

 

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்வி வசதிகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், சிவில் மருத்துவ மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜெனரல் கமல் குணரத்ன,

 

அனைவருக்கும் அமைதியான நாடு என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயற்படும் பாதுகாப்பு அமைச்சு, கடந்த இரண்டு வருடங்களில் நாட்டை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஸ்திரப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 

மனித கடத்தல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் பாதுகாப்பு அமைச்சு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைக் கூற வேண்டும்.

 

அண்மைக்காலமாக அதிக கவனம் பெற்றுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்காக போதைப்பொருள்களைக் கைப்பற்றி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து கடற்படை தலைமையிலான முப்படையினரும் தலையிட்டு பெரும் பங்காற்றியுள்ளனர்.

 

அதன்படி 2023ஆம் ஆண்டு மாத்திரம் முப்படையினரின் நடவடிக்கைகளினால் சுமார் 560 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 3350 கிலோ கஞ்சா, 5220 கிலோ கேரள கஞ்சா, 60 கிலோ ஐஸ் போதைப்பொருள், சுமார் 151,000 போதை மாத்திரைகள்/கெப்சூல்கள் மற்றும் 6650 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

 

ஜூலை 2024க்குள், சுமார் 270 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது, 3640 கிலோ கஞ்சா, 12,720 கிலோ கேரள கஞ்சா, 150 கிலோ ஐஸ் போதைப்பொருள், 43,600 போதை மாத்திரைகள்/ கெப்சூல்கள் மற்றும் 5000 லீட்டர் கசிப்பு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

 

முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பை ஒருபோதும் மறக்க முடியாது என்பதையும் குறிப்பிட வேண்டும். அந்தப் போரில்

 

மரணம் அடைந்த போர்வீரர்களைத் தவிர, நாம் பாதுகாக்க வேண்டிய இன்னும் பலரும் இருக்கிறார்கள்.

 

அதாவது போரில் காயமடைந்த 60,000 வீரர்களில் சுமார் 10,000 போர்வீரர்கள் படுக்கையில் அல்லது சக்கர நாற்காலிகளில் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ மறுவாழ்வு வழங்கவும், வாழ்நாள் முழுவதும் சிகிச்சை அளிக்கும் வகையிலும் அத்திடிய, அனுராதபுரம், கம்புருப்பிட்டிய மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் நிவாரண நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

 

மேலும், நாட்டுக்காகப் போராடி மருத்துவக் காரணங்களால் ஓய்வு பெற்றிருக்கும் போது, 55 வயது நிறைவடையும் முன் உயிரிழந்த இராணுவ வீரர்களின் தங்கி வாழ்வோர்களுக்கு, அவர்கள் உயிருடன் இருந்தபோது பெற்று வந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் நிலையான மாதாந்திர கொடுப்பனவாக வழங்கப்படும். அதன்படி போரின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நீதி கிடைத்துள்ளது என்பதையும் கூற வேண்டும்.

 

22 வருட சேவையை முடித்து ஓய்வு பெறும் 3000 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுக்கு ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம், மீண்டும் தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. செங்கடலில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 550 கடல்சார் பாதுகாவலர்களை அனுப்ப வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கான ஆட்சேர்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

 

மேலும், சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்வி வசதிகளின் தரம் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிவில் மருத்துவ மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ மாணவர் சேர்ப்பது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பரிந்துரைத்த இஸட் புள்ளி அடிப்படையில் மாத்திரமே மேற்கொள்ளப்படும். திறமையான, நிபுணத்துவம் பெற்ற மற்றும் அங்கீகாரம் பெற்ற பேராசிரியர்கள் மாத்திரமே கற்பித்தலுக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதையும் கூற வேண்டும்.

 

மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்காக ஸ்தாபிக்கப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் 1000 க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் இலவச சிகிச்சை பெறுகின்றனர். அத்தோடு 2012 ஆம் ஆண்டு முதல் 286 வெளிநாட்டு மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும், மனிதக் கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியானது இலங்கையில் மனித கடத்தலுக்கு எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதுடன், அதற்கேற்ப, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இரண்டாம் நிலை அமுலாக்கத்தை இலங்கையினால் தொடர்ந்து 03 வருடங்களாக பேண முடிந்தது.

 

அத்துடன், கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட அமைதி காக்கும் நடவடிக்கைகளில் மீளப் பங்கெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது 301 இராணுவ வீரர்கள் லெபனான், தென் சூடான் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு பகுதிகளில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

அண்மைக் காலமாக அதிக சர்ச்சைக்குள்ளான மியன்மாரில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

 

உக்ரைன்-ரஷ்யா போருக்காக சென்றிருக்கும் முன்னாள் இராணுவ வீரர்கள் தொடர்பிலும் சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து பணியாற்றுகிறோம். இதேவேளை, முன்னாள் படைவீரர்கள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால், பாதுகாப்பு அமைச்சுக்கு தெரிவிக்குமாறு ரஷ்ய தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

 

மேலும், பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் கீழ் மண்சரிவு தேசிய மையமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது. இதன் மூலம், தற்போது, இலங்கையில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

 

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) நிதியுதவியுடன், 128 மண் சரிவு அபாயமுள்ள இடங்களை “நிலைப்படுத்துதல் நுட்பங்கள் மூலம் மண்சரிவு அபாயத்தைக் மட்டுப்படுத்தல்” திட்டத்தின் மூலம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தி வருகிறது. மேலும், இதுவரை 46 மண்ச்சரிவு அபாயமுள்ள இடங்களில் நிலைப்படுத்தல் பணிகளை நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

 

இதேவேளை, நாட்டின் சுகாதார திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மாத்தறை வைத்தியசாலையில் பத்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு கடற்படையினரால் பத்து மாடிக் கட்டிடம் நிர்மாணிக்கப்படுகிறது. அத்துடன், விமானப்படையின் ஆளணி

 

பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட மஹரகம அபெக்‌ஷா புற்றுநோய் வைத்தியசாலையின் ஆறு மாடிக் கட்டிடத்தை எதிர்வரும் வாரத்தில் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

அத்தோடு நாடு முழுவதும் உள்ள பல்வேறு மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைகளை புனரமைப்பதற்காக முப்படையின் ஆளணியை வழங்கி வருவதுடன், தொடர்ந்தும் அதே சேவை வழங்கப்படவுள்ளது.

 

மேலும், பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதை மட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கை, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, நிவாரணம் வழங்குதல், அனர்த்த சூழ்நிலைகளுக்கு தயார்படுத்துதல், அனர்த்த தவிர்ப்புக்கு தேவையான நுட்பங்களை செயல்படுத்துதல், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், பாதிக்கப்பட வேண்டிய பகுதிகளை கண்டறிந்து மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது போன்ற முக்கிய பணிகளை நாங்கள் செய்துள்ளோம். அதனால் சொத்து சேதம் ஏற்பட்டாலும் உயிர் சேதத்தை குறைக்க முடிந்துள்ளது”என்றும் அவர் தெரிவித்தார்.

 

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மேஜர் ஜெனரல் சீ.ஏ விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஏ. எம். சீ. டபிள்யூ. அபேகோன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.