ரெட் அலெர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு

திருவனந்தபுரம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிக கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது. அட்டமலையில் இருந்து முண்டகை பகுதியை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.இதனால், தனித்தீவில் சிக்கியது போல 500 வீடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டிக்கொண்டனர்.

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காசர்கோடு, கன்னூர், வயநாடு, மலப்புரம், திருச்சூர், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள அரசுக்கு உதவுவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.