மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரு டி20 போட்டிகளின் முடிவில் 2-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இதையடுத்து ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடரின் போது புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் முதல் முறையாக விராட் கோலி விளையாட உள்ளார். கவுதம் கம்பீர் தலைமையில் விராட் கோலி விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே மாநிலத்தில் பிறந்து ஒன்றாக நாட்டுக்காக விளையாடிய அவர்கள் 2013 ஐ.பி.எல் தொடரில் சண்டை போட்டுக் கொண்டார்கள். அத்துடன் 10 வருடங்கள் கழித்து 2023 ஐ.பி.எல் சீசனிலும் கவுதம் கம்பீர் – விராட் கோலி வாக்குவாதம் செய்தனர். இருப்பினும் 2024 ஐ.பி.எல் தொடரில் தாமாக சென்று விராட் கோலியிடம் பேசிய கவுதம் கம்பீர் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
அத்துடன் பயிற்சியாளராக பொறுப்பேற்றதும் விராட் கோலிக்கு மெசேஜ் செய்ததாகவும், நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்றும் சமீபத்தில் கவுதம் கம்பீர் கூறியிருந்தார். இந்நிலையில் கம்பீர் – விராட் கோலி மேற்கொண்டு சண்டை போட்டுக்கொள்ள மாட்டார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமென நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, அதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஏனெனில் நாம் இங்கே அமர்ந்து கொண்டு அது வேலை செய்யும், இது நடக்கும் என்று சொல்ல முடியாது. இருப்பினும் அந்த இருவரும் கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு ஒன்றாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக விராட் கோலியை பொறுத்த வரை கவுதம் கம்பீர் எப்படி அணியை வழி நடத்துகிறார் என்பதை பார்ப்பார்.
மறுபுறம் விராட் கோலியின் தலைமைப் பண்புகளை பயன்படுத்தி இளம் வீரர்களுக்கு உதவ வேண்டும் என கம்பீர் நினைப்பார். எனவே அவர்களுடைய உறவு எப்படி இருக்கும், எப்படி ஒன்றாக அணியை வழி நடத்துவார்கள் என்பது நமக்குத் தெரியாது. இருப்பினும் அவர்கள் இருவருமே அற்புதமான கிரிக்கெட் வீரர்கள்.
கிரிக்கெட்டை பற்றிய நல்ல அறிவை கொண்டவர்கள். எனவே அணிக்கு நன்மையை செய்யக்கூடிய வேலையை செய்வதற்கு அவர்கள் போதுமான புத்திசாலித்தனத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.