புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ஓராண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச நாட்களை உயர்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் கமலேஷ் பாஸ்வான், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கொவிட்-19 பரவல் அதிகமாக இருந்த 2020-21-ம் நிதியாண்டில் மொத்தம் 389.09 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டன. 2022-23-ம் நிதியாண்டில் மொத்தம் 293.70 கோடி மனித வேலை நாட்களும், 2023-24-ம் நிதியாண்டில் மொத்தம் 309.01 கோடி மனித வேலை நாட்களும் உருவாக்கப்பட்டன.
2023-24-ம் நிதியாண்டில், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் போன்ற நாட்டின் சில பகுதிகள் வறட்சி சூழ்நிலையை எதிர்கொண்ட நிலையிலும் அதிக மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட்டன. எனவே, 2023-24-ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் அதிக மனித வேலை நாட்களை நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு நிலைமையுடன் ஒப்பிடுவது பொருத்தமானதாக இருக்காது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ஓராண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச நாட்களை உயர்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை. இருப்பினும், வனப்பகுதியில் உள்ள ஒவ்வொரு பழங்குடியின குடும்பத்திற்கும் கூடுதலாக 50 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்பை (நிர்ணயிக்கப்பட்ட 100 நாட்களுக்கு அப்பால்) வழங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த குடும்பங்களுக்கு வன உரிமைகள் சட்டம் 2006-ன் கீழ் வழங்கப்பட்ட நில உரிமைகளைத் தவிர வேறு எந்த தனியார் சொத்தும் இல்லை.
இது தவிர, வறட்சி, இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட கிராமப்புறங்களில் ஒரு நிதியாண்டில் கூடுதலாக 50 நாட்கள் வரை ஊதிய வேலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் பிரிவு 3 (4)-ன்படி, மாநில அரசுகள் தங்களது சொந்த நிதியிலிருந்து இந்தச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் கூடுதல் வேலை நாட்கள் வழங்க வழிவகை செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.