வயநாடு: மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் என்பது தான் வயநாடு மாவட்டத்தின் சூரல்மலா மற்றும் முண்டக்கை டவுன் பகுதியின் தற்போதைய நிலை. அங்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.
பொதுவாகவே கேரளம் அதீத மழைப்பொழிவை சந்திக்கும் போதெல்லாம் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படுவது வயநாடு, மலப்புரம் மற்றும் இடுக்கி மாவட்டங்கள் தான். இந்த ஆண்டும் கனமழை அதிகமாக பெய்துவரும் கேரளத்தில், இன்று (ஜூலை 30) அதிகாலை வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரையிலான நான்கு மணிநேரத்தில் மூன்று பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் முண்டக்கை டவுன் பகுதியில் இரண்டு முறை நிலச்சரிவு ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், சூரல்மலா கிராமத்தின் ஒரு பகுதி நிலச்சரிவில் சிக்கி முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலம் சேதம்: மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள பேரிடர் படையினர், நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தாக்கம் சரியாக தெரியவில்லை என கூறுகின்றனர். அங்குள்ள பாலம் ஒன்று முற்றிலும் சேதமடைந்தது காரணமாக சேதங்களை மதிப்பிட முடியவில்லை.
சூரல்மலா கிராமத்தை தாண்டி தான் முண்டக்கை டவுனுக்கு செல்ல முடியும். இரண்டு ஊர்களையும் இணைக்கும் பாலம் கனமழை, நிலச்சரிவால் சிதிலமடைந்துள்ளது. இதனால், முண்டக்கை டவுனுக்கு மீட்புக்குழு செல்வதில் சிரமம் நிலவுகிறது. இதனால், முண்டக்கை டவுன் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியுள்ளது. சில நிமிடங்கள் முன் அரசின் இரண்டு ஹெலிகாப்டர்கள் அங்கு தரையிறங்க முயற்சித்தது. ஆனால், காலநிலை மோசமாக இருப்பதால், அங்கு தரையிறங்க முடியாமல் மீண்டும் கோழிகோட்டுக்கு திரும்பியது.
முண்டக்கை டவுன் பகுதியில் அதிகாலை 3.15 மணியளவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதில் புனிச்சிரிமட்டம் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கியிருக்கும் யூனுஸ் என்பவர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். முண்டக்கை டவுனில் மட்டும் கிட்டத்தட்ட 100 வீடுகள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்கிறது முதல்கட்ட தகவல்.
முண்டக்கை டவுனுக்கு அடுத்த அட்டமலை கிராமத்தில் ஓடும் ஆற்றில் ஆறு சடலங்களை அக்கிராம மக்கள் மீட்டெடுத்துள்ளனர். இவை, முண்டக்கை டவுனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் என்று கூறப்படுகிறது. எட்டு மீட்டர் நீளமுள்ள இந்த ஆறு வெள்ளப்பெருக்கு காரணமாக தற்போது சீற்றத்துடன் பாய்கிறது என்பதால், முண்டக்கை டவுனில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இந்த ஆற்றில் மேலும் கிடைக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதேபோல், பொதுகல்லு ஊராட்சியில் உள்ள சாலியாற்றில் இருந்து 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேப்பாடி பகுதியில் இருந்து உருவாகும் ஆறு தான் இந்த சாலியாறு. மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து வெளியேறும் நீரும் சகதியும் ஆற்றில் கலப்பதால், சாலியாறு பார்ப்பதற்கே அபாயகரமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த மற்ற கிராம மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ள வேளையில், கண்ணூரில் இருந்து இந்திய ராணுவம் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளது. இதேபோல், தமிழகத்தின் குன்னூரில் இருந்தும் ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளனர்.
Incessant rain triggered landslips in many places, including Mundakkai, Attamala and Kunhome areas apart from Chooralmala in Wayanad district.
: Special arrangement
Follow live updates here: https://t.co/73YASA1p0I pic.twitter.com/lxxZrosAXv
— The Hindu (@the_hindu) July 30, 2024