குறுகிய காலத்திலேயே திரையுலகில் தனக்கான இடத்தைப் பிடித்த இளம் நடிகர் துல்கர் சல்மான்.
கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான். அவரது தந்தை மம்மூட்டியைப் போலவே அவரும் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். துல்கர் சல்மானைப் பொறுத்தவரை காமெடி கதாபாத்திரத்தில் துவங்கி, ரவுடி கதாபாத்திரம் வரை பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது ‘வாத்தி’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். துல்கருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார். சித்ரா என்டர்டெயின்மன்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இதனிடையே, துல்கர் சல்மானின் நடிப்பு, உடல்மொழி போன்றவற்றை ஷாருக்கானுடையதைப் போன்று இருப்பதாக ஒப்பிட்டு, துல்கரைப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த துல்கர் சல்மான், “படத்திலும் சரி நிஜத்திலும் சரி ஷாருக்கானின் மிகப்பெரிய ரசிகன் நான்.
அவர் நம் அனைவருக்கும் ஒரு பெரிய முன்மாதிரி. அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல. வலிமையான ஆளுமையைக் கொண்டவர். என்னை அவருடன் ஒப்பிடுவது அவரை அவமானப்படுத்துவது போன்றது. இங்கு ஒரே ஒரு ஷாருக்கான் மட்டுமே இருக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.