நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்திருக்கிறது. 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை தென் கொரிய இணையை வீழ்த்தி அசத்தியிருக்கிறது.
முன்னதாக, 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு இந்திய இணை மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் தகுதிபெற்றிருந்தது. தகுதிச்சுற்றில் இந்திய இணை மூன்றாவது இடம்பிடித்திருந்தது. நான்காவது இடம்பிடித்திருந்த தென் கொரிய இணைக்கு எதிராக வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இன்று மோதியிருந்தது.
இறுதிப்போட்டியில் ஒரு அணியின் இரண்டு நபர்களும் ஆளுக்கு ஒரு முறை சுட வேண்டும். சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளை எடுக்கும் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். இப்படி ஒவ்வொரு சுற்றாக ஆடி, ஆடி 16 புள்ளிகளை முதலில் எடுக்கும் அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இந்திய இணைக்கு முதல் சுற்று அதிர்ச்சிகரமாகத்தான் இருந்தது. தென் கொரிய அணிதான் முதல் சுற்றை வென்று இரண்டு புள்ளிகளைப் பெற்றது. இந்திய இணையில் மனு பாக்கர் துல்லியமாகச் சுட்டு 10.6 புள்ளிகளை எடுக்க, சரப்ஜோத் சொதப்பி 8.6 புள்ளிகளை மட்டுமே எடுத்தார். இதனால்தான் முதல் சுற்று கையைவிட்டுப் போனது. ஆனால், அதற்கடுத்த சுற்றுகளில் சரப்ஜோத் சிங் சுதாரித்துக் கொண்டார். மனுவோடு இணைந்து அவரும் துல்லியமாகச் சுட ஆரம்பித்தார்.
இதனால் தொடர்ச்சியாக 4 சுற்றுகளை இந்திய இணை வென்றது. 8-2 எனப் போட்டி சென்றது. இந்தியா வெற்றியை நெருங்கியது. இதன்பிறகு தென் கொரிய வீரர்கள் சில சுற்றுகளை வென்றிருந்தாலும் அவர்கள் 10 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்தது.13 சுற்றுகள் முடிவில் இந்திய இணை 16 புள்ளிகளைப் பெற்று போட்டியை வென்றது. இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்தது.
ஏற்கனவே, இந்தியா சார்பில் மனு பாக்கர் 10 மீ ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றிருந்தார். இப்போது மீண்டும் வெண்கலம் கிடைத்திருக்கிறது. மனு பாக்கருக்கு இரண்டாவது பதக்கம் இது. கடந்த 124 ஆண்டுகளில் ஒரே ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக இரண்டு பதக்கங்களை வென்ற முதல் நபர் எனும் பெருமையை அவர் பெற்றிருக்கிறார். இதற்கு முன்னதாக, இந்திய தடுப்போட்ட வீரர் நார்மன் கில்பர்ட் பிரிட்சார்ட் 1900ஆம் ஆண்டு இதே பாரிஸ் நகரத்தில் நடந்த ஒலிம்பிக்ஸில் இரண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.