அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு…? பதிலளித்த ரஷியா

மாஸ்கோ,

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக 78 வயதுடைய முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இதேபோன்று, ஜனநாயக கட்சி வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் அறிவிப்பு வெளியானதும், கட்சிக்குள் ஆதரவை திரட்டும் பணியில் கமலா ஹாரிஸ் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க உளவு பிரிவு அதிகாரிகள் அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்து உள்ளனர்.

அதுபற்றிய செய்தியில், வருகிற நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா செல்வாக்கு செலுத்த திட்டமிட்டு உள்ளது.

இதற்காக, ரஷியாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிறுவனங்களை அந்நாடு பயன்படுத்தி உள்ளது. அமெரிக்க மக்களின் கருத்துகளை வடிவமைக்கும் நோக்கில் ரஷியா செயல்படுகிறது என அமெரிக்க உளவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபற்றி ரஷியாவின் கிரெம்ளின் அரண்மனையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, இது முற்றிலும் அபத்தம். கேட்பதற்கே நகைச்சுவையாக உள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் முற்றிலும் மறுக்கிறோம் என கூறியுள்ளார்.

ரஷியாவை ஓர் எதிரியாக காட்ட, அமெரிக்க உளவு பிரிவு அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். அமெரிக்க தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இதுபோன்று நிறைய அறிக்கைகள் வெளிவரும்.

ஏனெனில், குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர் என இருவரும், அரசியல் போராட்டத்தில், அதுவும் தேர்தல் பிரசாரத்தின்போது, சுயநலத்திற்காக தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி கொள்ளக்கூடிய முக்கிய காரணிகளாக ரஷியாவும், அதன் தலைமையும் உள்ளனர் என்றும் பெஸ்கோவ் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.