புதுடெல்லி: இணையதளத்தில் டீப் ஃபேக்ஸ் உள்ளிட்ட தவறான சித்தரிப்புகள் பரவாமல் தடுக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா கூறியுள்ளார்.
மக்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ள ஜிதின் பிரசாதா, “டீப் பேஃக்ஸ் உள்ளிட்ட தவறான சித்தரிப்புகளை தடுக்கும் வகையிலான பொதுமக்கள் மற்றும் அது சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் உள்ளீடுகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. அதன் அடிப்படையில் தற்போதுள்ள சட்டத்தில் மாற்றங்களை செய்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் அவசியத்தை அமைச்சகம் உணர்ந்துள்ளது.
இத்தகைய தவறான தகவல்கள் மற்றும் சித்தரிப்புகளை தடுக்க வகை செய்யும், தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021-ஐ அமைச்சகம் 25.02.2021 அறிமுகம் செய்து அதனை 28.10.2022, 06.04.2023 ஆகிய தேதிகளில் திருத்தம் செய்துள்ளது. 2021-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளில் தவறான படங்களைப் பகிர்தல், பதிவேற்றம் செய்தல், பரப்புதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டீப் பேஃக்ஸ் என்பது செயற்கை நுண்ணறிவு மூலம் தவறான தகவல், படங்கள், சித்தரிப்புகளை வெளியிடுவதாகும்” என குறிப்பிட்டுள்ளார்.