பல்லகெலே,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் இளம் வீரர்களான சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சில கருத்துகளை கூறியுள்ளார். அதாவது சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பார்க்கும் போது கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர்தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்கள் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரை பார்க்கும்போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் கங்குலி ஆகியோர் விளையாடுவதை எனக்கு நினைவுபடுத்துகிறார்கள். அவர்களது உத்திகள் ஒருவரை ஒருவர் பாராட்டும்படி அமைந்துள்ளது. மேலும் இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்ய வரும்போது நான் அவர்களைத்தான் பார்க்கிறேன். ஜெய்ஸ்வாலுக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கும்போது அவர் அந்த இடத்தை கச்சிதமாக பிடித்துக் கொள்வார்.
ஏனென்றால் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடிய விதம் அவருக்கு உதவும். ஒருநாள் கிரிக்கெட் மற்ற இரண்டு வடிவ தொடர்களை விட அவருக்கு எளிதாக இருக்கும். ஏனென்றால் இந்த உலகில் அவரால் எங்கு வேண்டுமானாலும் ரன்கள் குவிக்க முடியும் என்ற மனநிலை அவருக்கு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கில் மற்றும் ஜெய்ஸ்வால் இந்திய டி20 அணியில் தொடக்க வீரர்களாக ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.