கர்நாடகா திறந்துவிடும் நீரின் அளவை கண்காணிக்க காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

புதுடெல்லி/பெங்களூரு: காவிரி ஆற்றில் கர்நாடக அரசு திறந்துவிடும் நீரின் அளவை கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளது.

காவிரி ஒழுங்காற்று குழுவின் 100-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில‌ அரசுகளின் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள், காவிரி தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள், வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். அப்போது 4 மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் பாசனப்பகுதிகளில் அமைந்துள்ள அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் மழைப் பொழிவின் அளவு குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசின் தரப்பில், “ஜூலை மாதத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பொழிந்ததால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளும் நிரம்பியுள்ளன. தென்மேற்கு பருவமழை அடுத்த இரு வாரங்களுக்கு தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய‌ காவிரி நீரை முறையாக திற‌ந்துவிட வேண்டும். இதனை ஒழுங்காற்று குழு கவனமாக கண்காணிக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் 45 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும்,” என வலியுறுத்தப்பட்டது.



இதற்கு கர்நாடக அரசின் தரப்பில், “காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்ட அளவைவிட, அதிகளவில் நீர் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய நீரும் தங்கு தடையின்றி திறந்துவிடப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா பேசுகையில், “கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை முறையாக திறந்துவிட வேண்டும். தமிழக அரசு புதுச்சேரிக்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரை முறையாக வழங்க வேண்டும்,” என பரிந்துரை செய்தார்.

தமிழகத்துக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1.50 லட்சம் கன அடியில் இருந்து 80 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை 7 மணி நிலவரப்படி, மண்டியாவில் உள்ள‌ கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 38 ஆயிரத்து 977 கன அடிநீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், வினாடிக்கு 55 ஆயிரத்து 659 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 805 கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், வினாடிக்கு 24 ஆயிரத்து 662 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்ப‌ட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.