காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் இன்ஜின் கோளாறு காரணமாக இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் இரு விமானப் படை வீரர்கள் இருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பகுதியில் திருவந்தார் அருகே சாய்பாபா கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலின் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புதன்கிழமையன்று திடீரென தரையிறங்கியது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஹெலிகாப்டரை நோக்கி ஓடினர். அப்போது அந்த ஹெலிகாப்டர் தாம்பரம் ராணுவத் தளத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பது தெரியவந்தது.
இந்த ஹெலிகாப்டரின் இன்ஜினில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த ஹெலிகாப்டரில் பயிற்சியாளர்கள் அனிரூத் குரூவர், மேஜர் சுராஜ் பாட்டியால் ஆகியோர் இருந்தனர். ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் அதில் இருந்த ராணுவத்தினருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.இது குறித்து தகவல் அறிந்த சாலவாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
அதற்குள்ளாக அந்த ஹெலிகாப்டரை சரி செய்ய மற்றொரு ஹெலிகாப்டர் அங்கு வந்தது. அந்த ஹெலிகாப்டரில் இரண்டு பைலட், மூன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் இருந்தனர். அவர்கள் பழுதான ஹெலிகாப்டரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் அந்தப் பகுதியில் கிராம மக்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் பழுதாகி நின்ற ஹெலிகாப்டர் சரிசெய்யப்பட்டு இரண்டு ஹெலிகாப்டர்களும் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டன.