கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், வயநாடு பேரிடருக்கான காரணம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காலநிலை விஞ்ஞானியும் புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலருமான ராஜீவன் கூறியதாவது: கேரளாவின் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இத்தகைய தொடர் மழை காரணமாக மணல் மிருதுவாகி அரிப்பு ஏற்படுவது எளிதாகிவிட்டது. மண்ணில் ஈரப்பதம் உச்சபட்சத்தை எட்டும்போது தெவிட்டு மண்ணாகிக் கரைந்து உருண்டோடிவிடும்.
இப்படியிருக்க, பாரம்பரிய காட்டு மரங்கள் அடியாழம் வரை வேர் பரப்பி மணலை இறுகப் பற்றிக்கொள்ளக்கூடியவை. அதுவே ரப்பர் மாதிரியான தோட்ட மரங்களின் வேர்களால் அவ்வளவாக மணலை இறுக பற்றிக்கொள்ள முடியாது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வணிக நோக்கத்துக்காகத் தோட்டப்பயிர்கள் பெருமளவில் விளைவிக்கப்படுவதால் தற்போதைய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய வெப்பமண்டல வானியல் ஆய்வு நிறுவன விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கால் கூறியதாவது: கேரள மாநிலத்தில் உள்ள சரிபாதி குன்றுகள் மற்றும் மலைகளினால் ஆனது. இத்தகைய பகுதிகளில் உள்ள மலைச்சரிவு 20 டிகிரி வரை செங்குத்தாக இருப்பதால் கனமழை பெய்தால் நிலச்சரிவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இத்தகைய சூழலில், ‘சூழலியல் உணர்திறன் மிகுந்த மண்டலங்கள்’ அடையாளம் காணப்பட்டு அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு அப்பகுதி வாழ் மக்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் முன்னறிவிப்பை வழங்கினால் பல உயிர்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் நிச்சயம் பாதுகாக்க முடியும்.
இதுதவிர பருவநிலை மாற்றமும் மனிதர்களின் இயற்கைக்கு புறம்பான செயல்பாடுகளும் இத்தகைய அதிபயங்கரமான நிலச்சரிவு ஏற்பட முக்கிய காரணிகள் என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வாறு அவர் கூறினார்.