கேரள நிலச்சரிவு நிவாரணத்துக்காக தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வரிடம் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், நிவாரண பணிக்காக ரூ.5 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுவினர் உடனடியாக கேரளா செல்ல உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடும் மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் அதிக அளவில் உயிரிழப்புகளும், பொது சொத்துகளுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனை, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை தொடர்பு கொண்டு, விவரங்களை கேட்டறிந்தார்.

இந்த இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகஉறுதி அளித்துள்ளார்.



பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக கேரள அரசுக்கு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடியை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்கு துணையாக பணியாற்ற, தமிழகத்தில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான கீ.சு.சமீரன், ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்பு குழுவினரை உடனடியாக அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மீட்பு குழுவில், தீயணைப்பு துறை இணை இயக்குநர் தலைமையில் 20 வீரர்கள், ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாநில பேரிடர் மீட்பு குழுவின் 20 வீரர்கள், 10 மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் இடம்பெற்றுள்ளனர். மீட்பு, நிவாரணம், மருத்துவ சிகிச்சை பணிகளில் இவர்கள் கேரள அரசுடன் இணைந்து பணியாற்றுவார்கள். இந்த குழு உடனடியாக கேரளாவுக்கு புறப்படவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் நிலச்சரிவு நிகழ்வுகள் மற்றும் அதனால் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோனதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இன்னமும் பலர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர் என தெரியவந்துள்ளது. முழுவீச்சில் நடந்து வரும் மீட்பு பணிகள் நிச்சயம் அனைவரையும் காப்பாற்றும் என நம்புகிறேன்.

நமது சகோதர மாநிலமான கேரளா நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில், அவர்களுக்கு தேவைப்படும் எந்தவிதமான இயந்திரம், பொருள் மற்றும் மனித ஆற்றல் சார்ந்த உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.