வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 120 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அடைமழை, வெள்ளம் காரணமாக பல்வேறு சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பலரது நிலைமை என்னவென்று தெரியாததால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், விமானப் படையினர், தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பல்வேறு குழுவினர் மீட்பு, நிவாரண, மருத்துவப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது.
இந்நிலையில், பலத்த மழை காரணமாக, கேரளாவின் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளநீர் பாய்ந்ததால் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கிருந்த வீடுகளை மூடியது. டன் கணக்கிலான மண் சேறும் சகதியுமாக மூடியதில், அந்த வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
சில மணி நேர இடைவெளியில், நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் இரண்டாவதாக அதே பகுதியில் வேறொரு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நள்ளிரவில் பரிதாபம்: மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள 3 கிராமங்களில்தான் அதிக அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 120 பேர் உயிரிழந்தனர். நள்ளிரவில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால், என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர்.
இதற்கிடையே, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த 250-க்கும் மேற்பட்டோரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு இணைப்பு சாலைகள், பாலங்கள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மீட்பு படையினர் சம்பவ இடத்தை அடைவது சவாலான பணியாக மாறியுள்ளது.
முண்டக்கை, சூரல்மலை பகுதியில் நிலச்சரிவால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் வசித்த மக்கள்தான் நிலச்சரிவில் அதிக அளவில் சிக்கியதாக மாநில பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் இருந்த சுவடு தெரியாமல் சேற்று மண்ணில் புதைந்து போயுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட 3 கிராமங்களில் சுமார் 400 குடும்பங்களை சேர்ந்த 1,000 பேர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களும் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தலைவர்கள் இரங்கல்: வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியுள்ளதாவது:
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மீட்பு பணிகள் நல்லபடியாக நடைபெறவும் பிரார்த்திக்கிறேன்.
பிரதமர் மோடி: வயநாடு நிலச்சரிவு குறித்து அறிந்து மிகவும் கவலை அடைந்தேன். அன்பான உறவுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டறிந்தேன். கேரளாவுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி: நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் மக்களின் நிலை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன். உயிரிழப்பு பெரும் கவலையை தருகிறது. தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். மத்திய அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
‘சிவப்பு’ எச்சரிக்கையால் பதற்றம்: வயநாடு மட்டுமின்றி, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களிலும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில் நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களில் இன்றும் (ஜூலை 31) கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை (‘ரெட் அலர்ட்’) விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மீட்பு பணியில் களமிறங்கியது ராணுவம்: மீட்பு பணிக்காக பெங்களூருவில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை வயநாடு வந்துள்ளது. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை மையத்தில் இருந்து 2 விமானப்படை ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. தமிழக அரசு தரப்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு வீரர்கள் என 50 பேர் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீரர்களுடன் உள்ளூர் மக்களும் மீட்பு நடவடிக்கைகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
அட்டமலையில் இருந்து முண்டக்கை பகுதிக்கு செல்வதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அப்பகுதி தனித்தீவு போல மாறியதால், 500 குடும்பங்களை சேர்ந்த மக்கள் சிக்கிக் கொண்டனர். பாதிக்கப்பட்டு ஆங்காங்கே தவித்து நிற்கும் மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தீவிரமாக நடந்தது.