புதுடெல்லி: மக்களவையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் சிக்கி அர்ஜுனனின் மகன் அபிமன்யு உயிரிழந்தார். தற்போதைய 21-ம் நூற்றாண்டில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 6 பேர் புதிய சக்கரவியூகத்தை அமைத்துள்ளனர்’’ என்று குற்றம் சாட்டினார்.
இந்த சூழலில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் நேற்று முன்தினம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாத வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் அமிர்த காலத்தில் சாமானிய மக்களின் ‘பாக்கெட்’ காலி செய் யப்படுகிறது. மத்திய அரசுக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனால் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.8,500 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
அபராதம் என்ற பிரதமர் மோடியின் சக்கர வியூகத்தின் மூலம் பொதுமக்களின் முதுகெலும்பை உடைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்திய மக்கள், அபிமன்யு கிடையாது. அவர்கள் அர்ஜுனன் போன்றவர்கள். உங்களது சக்கர வியூகத்தை மக்கள் உடைப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.